லெபனான் மற்றும் சிரியாவில் நேற்று(செப்டம்பர் 17) மதியம் நூற்றுக்கணக்கான ‘பேஜர்கள்’ வெடித்த பயங்கரச் சம்பவத்தில் 8 வயது பெண் குழந்தை உட்பட 9 நபர்கள் பலியாகியுள்ளார்கள். மேலும் லெபனானுக்கான ஈரான் நாட்டுத் தூதுவரின் ஒரு கண் பார்வையும் பறிபோனது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பை அழிக்க பாலஸ்தீனின் மீது போர் தொடுத்தது. இந்த போர் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலகு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவி புரிந்துவருகின்றன. ஹமாஸுக்கு ஈரான், ஏமன், லெபனான் போன்ற நாடுகள் ஆதரவாக உள்ளன.
இதில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா என்ற அமைப்பு, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில்தான் இஸ்ரேல் அரசு, தொலைபேசி சிக்னல் மூலம் தங்களைக் கண்காணிப்பதைத் தடுப்பதற்காக, பல ஆயிரம் ‘பேஜர்களை’ ஹிஸ்புல்லா அமைப்பு வாங்கியது.
இந்த நிலையில்தான், நேற்று மதியம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்களில் ஒரே சமயத்தில் குறுஞ்செய்தி வந்தது போல சில நொடிகளுக்குச் சத்தம் வந்துள்ளது. இதனையடுத்து அனைத்து பேஜர்களும் ஒரே சமயத்தில் வெடித்துள்ளது.
இந்த பயங்கரச் சம்பவத்தில் 8 வயது பெண் குழந்தை உட்பட 9 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் லெபனானுக்கான ஈரான் நாட்டு தூதர் மொஜ்தாபா அமானி பயன்படுத்திய பேஜரும் வெடித்ததால், அவரது ஒரு கண் பார்வையும் பறிபோனது. மேலும் மற்றொரு கண்ணும் படுகாயம் அடைந்துள்ளதாக ஈரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேல் தான் இந்த தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறது என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளுக்கான லெபனான் நாட்டு தூதர் இந்த தாக்குதல் ஒரு போர்க் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பேஜர்களை தயாரித்ததாக சொல்லப்படும் தைவான் நாட்டை சேர்ந்த ‘கோல்ட் அப்பல்லோ’ நிறுவனம், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பேஜர்களை தாங்கள் நேரடியாகத் தயாரிக்கவில்லை எனவும், இதை ‘பிஏசி’ என்கிற ஐரோப்பிய நிறுவனம் தான் தங்களுக்காகத் தயாரித்தார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த சம்பவம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமான போர் உலகப் போராக மாறிவிடுமோ என்ற பயத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் 3 ரயில்கள்… பட்டியல் வெளியீடு!