நாட்டிலுள்ள மொத்த செல்வத்தில் 40 சதவிகிதம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவிகித பேரிடம் மட்டும் இருப்பதாக ஆக்ஸ்பேம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவின் டிவோஸ் நகரில் ஆக்ஸ்பேம் இன்டர்நேஷனல் எனப்படும் பொருளாதார உரிமை குழுவின் சர்வதேச கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தின் முதல் நாளான நேற்று பொருளாதாரத்தில் இந்தியாவின் சமத்துவமின்மை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையின் படி நாட்டில் உள்ள, மொத்த செல்வத்தில் 40 சதவிகிதத்தை ஒரு சதவிகித பெரும் பணக்காரர்கள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களுக்கு ஒருமுறை 5% வரி விதித்தால் அதை கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானிக்கு 2017 முதல் 2021 வரை ஒருமுறை பிரத்தியேக வரி விதித்திருந்தால் அதன் மூலம். 1.79 லட்சம் கோடி ரூபாய் பெற்றிருக்கலாம். இது ஒரு வருடத்திற்கு 50 லட்சம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு போதுமானது.
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துகளுக்கு ஒருமுறை இரண்டு சதவிகித வரி விதிக்கப்பட்டால் அது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ சேவையை வழங்க 40,423 கோடியைப் பெறலாம்.
அதுபோன்று இந்தியாவில் உள்ள பில்லியனர்களுக்கு ஒருமுறை 5% வரி விதிக்கப்பட்டால் ரூ.1.37 லட்சம் கோடி கிடைக்கும்.
இது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் மதிப்பிட்டுள்ள ஓராண்டு பட்ஜெட்டான முறையே ரூ. 86,200 மற்றும் ரூ. 3,050 கோடியை விட 1.5 மடங்கு அதிகமாகும்.
பாலின சமத்துவத்தைப் பொருத்தவரை இந்தியாவில் ஆண்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தால் பெண்கள் 63 பைசா மட்டுமே சம்பாதிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனா தொற்று தொடங்கியது முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதாவது 3,608 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
2020இல் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலையில் 2022 இல் அது 166 ஆக அதிகரித்துள்ளது.
2021-22ல் ரூ. 14.82 கோடி ஜிஎஸ்டி கிடைத்துள்ளது. அதில் தோராயமாக 64% சதவிகிதம் அடித்தட்டில் உள்ள 50 சதவிகிதம் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. வெறும் 3 சதவிகிதம் தான் முதல் 10 பணக்காரர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஆக்ஸ்பேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹார் கூறுகையில், “பணக்காரர்களுடன் ஒப்பிடும் போது ஏழைகள் அதிக வரி செலுத்துகிறார்கள். தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பெண்கள், முறைசாரா துறை தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகின்றனர் இது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக வளர உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.
பிரியா
வசூலில் துணிவை முந்தும் வாரிசு!
வேலைவாய்ப்பு : காசநோய் கட்டுப்பாட்டு மையத்தில் பணி!