நீட் தேர்வில் அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களையும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்துவிட்டதாகவும், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்த போது, தேசிய தேர்வு முகமை சார்பில், “பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாலும், அதிக மாணவர்கள் தேர்வு எழுதியதாலும் 61 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. கொரோனா காலக்கட்டத்தின் போது மாணவர்கள் எதிர்கொண்ட அழுத்தத்தை குறைப்பதற்காக பாடத்திட்டம் குறைக்கப்பட்டது” என்று தெரிவித்தது.
தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ நேற்று இரண்டாவது நிலை அறிக்கையை தாக்கல் செய்தது” என்று தெரிவித்தார்.
அப்போது இந்த வழக்கில் சிபிஐ சமர்ப்பித்த அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தலைமை நீதிபதி, “விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ என்ன சொல்லியிருக்கிறது என வெளியில் தெரியவந்தால், தவறு செய்தவர்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்” என்றார்.
தொடர்ந்து தலைமை நீதிபதி, “23 லட்சம் பேர் தேர்வு எழுதினாலும் 1 லட்சம் மாணவர்கள் தான் சேருவார்கள் என்பதால் மறுத்தேர்வுக்கு உத்தரவிடமுடியாது. வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்யலாம்” என்றும் குறிப்பிட்டார்.
மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, “நீட் முறைகேடு தொடர்பான சென்னை ஐஐடியின் ஆய்வறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை. சென்னை ஐஐடி இயக்குநர்களில் ஒருவர், தேசிய தேர்வு முகமையின் உறுப்பினர். சென்னை ஐஐடி அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
என்.டி.ஏ தரப்பில் ஐஐடி இயக்குநர் தற்போதைய உறுப்பினர் இல்லை முன்னாள் உறுப்பினர் என விளக்கமளிக்கப்பட்டது
இதில் மனுதாரரின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
ரிக்ஷாவில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்
இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹூடா, ‘ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளி தேர்வு மையத்துக்கு இ-ரிக்ஷாவில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டு, அதனை பள்ளி முதல்வர் பெற்றுக்கொண்டுள்ளார். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பள்ளியின் முதல்வர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ. இதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. முறைகேடு பல கோணங்களிலும் நடந்திருக்கிறது” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், ‘மே 4ஆம் தேதி வெளியான டெலிகிராம் வீடியோவில் விடைகளுடன் கூடிய பேப்பர்கள் இடம்பெற்றிருந்தன. அப்படியானால் வினாத்தாள் மே 3ஆம் தேதி கசிந்திருக்கிறது” என்றார்.
ஆனால் மே 5ஆம் தேதி தான் வினாத்தாள் கசிந்ததாக என்.டி.ஏ கூறியது.
இதை கேட்ட தலைமை நீதிபதி, ‘மே 5ஆம் தேதி வினாத்தாள் கசிந்து மாணவர்கள் மனப்பாடம் செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படியானால் மே 5ஆம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்க வேண்டும். இது உண்மையானால், மே 4ஆம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்கும்.
இதில் இரண்டு சாத்திய கூறுகள் உள்ளன. வினாத்தாள் சேமித்து வைக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கும் முன்பே கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டுசெல்லும்போது கசிந்திருக்க வேண்டும். அந்தவகையில் மே 3 முதல் 5 ஆம் தேதிக்குள் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் வினாத்தாள் எப்போது கசிந்தது என பெரிய கேள்வி எழுகிறது” என்று குறிப்பிட்டார்.
இன்று காலை முதல் நடந்த விசாரணையில், நீட் யுஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் முழுமையாக வெளியிட வேண்டும். அப்போதுதான் தேர்வர்கள் பெற்ற மைய வாரியான மதிப்பெண்கள் குறித்து தெரியவரும் என்று மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை நண்பகலுக்குள் வெளியிட வேண்டும். மாணவர்களின் அடையாளங்களை மறைத்து தேசிய தேர்வு முகமையின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு வைத்தனர்.
ஆனால் முடிவுகளை வெளியிட என்.டி.ஏ மறுப்புத் தெரிவித்து ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முடிவுகளை வெளியிட்டால் தான் முழு விவரமும் தெரிய வரும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஒரே வீட்டில் தாய், மகன், பேரன் கொலை… இருவர் கைது : நடந்தது என்ன?
ஒலிம்பிக்சில் இந்தியாவின் பிரதிநிதிகள்!