பிரதமர் நரேந்திர மோடியின் 77வது சுதந்திர தின உரை குறித்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை விமர்சித்து பேசி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டையில் இருந்து 10வது முறையாக நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 15) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் “நம் நாடு ஊழல், வம்சம் மற்றும் சமாதானத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி, நாட்டின் சாதனைகள் மற்றும் பெருமைகளை உங்கள் முன் சமர்பிப்பேன்” என்று பேசினார்.
பிரதமர் மோடியின் பேச்சு எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
என்ன மாதிரியான அணுகுமுறை?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ”பிரதமர் மோடி ஆணவத்தில் நான் மட்டுமே வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார். ஆனால் பொதுமக்களே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில், தேசத்தின் முன்னேற்றம் பற்றி பேசாமல், எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசுவது என்ன மாதிரியான அணுகுமுறை? அவர் கடந்த 9 ஆண்டுகளில் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் கடைசி உரை!
டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றும் சுதந்திர தின உரையே தனது கடைசி உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வாரிசுக்கு முன்னுதாரணமாக பாஜக
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ”பெரும்பாலான கட்சிகளில் வாரிசு கூறுகள் உள்ளன. வாரிசுக்கு முன்னுதாரணமாக பாரதிய ஜனதா கட்சி மாறிவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.
பாஜகவின் இரட்டை வேடம்!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சவுரப் பரத்வாஜ், ”பிரதமரின் சுதந்திர தின உரையை அவரது பிரியாவிடை உரையாக உணர்கிறேன். அடுத்த ஆண்டு செங்கோட்டையில் விருந்தினர்களுக்குக் கிடைக்கும் நாற்காலிகளில் அமர்ந்து சுதந்திர தின நிகழ்வை மோடி பார்ப்பார். மக்களின் ஆசைப்படி அவர் புதிய பிரதமரின் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்.
ஊழல், வாரிசு குறித்த பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதமர் மோடியே இன்று ஒத்துக்கொண்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ராஜ்நாத் சிங் குடும்பம், டெல்லியில் பர்வேஷ் வர்மா குடும்பம், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டே குடும்பம், ராஜஸ்தானில் சிந்தியா குடும்பம் என வம்ச அரசியலில் பா.ஜ.க வளர்ந்து வருகிறது” என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.
அடுத்த முறை நாங்கள் கொடி ஏற்றுவோம்!
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ”பிரதமர் மோடி கடைசியாக செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை இன்று ஏற்றியுள்ளார். அடுத்த முறை மூவர்ணக் கொடியை நாங்கள் ஏற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பொருத்தமற்ற பேச்சு!
பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ”நாட்டின் முக்கியவத்துவம் இந்த நாளில் வேலை வாய்ப்புகள், ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல் போன்றவற்றை குறித்து பேசவில்லை. ஆனால் பொருத்தமற்ற முறையில் இன்றும் அரசியலை பேசியுள்ளார். இது அவரது பதவிக்கு பொருந்தாத பேச்சு” என்று விமர்சித்துள்ளார்.
குடும்ப அரசியலில் பாஜக!
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், வாரிசு அரசியலை பேசும் மோடி, உத்தரபிரதேசத்தை முதலில் பார்க்க வேண்டும். பாஜக இங்கு குடும்ப அரசியலில் எடுத்துக்காட்டுகளாகிவிட்டது.” என்று கூறியுள்ளார்.
பிரதமரின் தவறான புரிதலால் ஏமாற்றம்!
காங்கிரஸின் சல்மான் குர்ஷித், ”ஒரு தேசிய தினத்திற்கும் அரசியல் நிகழ்வுக்கும் இடையில் வேறுபாடு காண்பதில் பிரதமரின் தவறான புரிதல் குறித்து ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவ்த்தார்.
பொது மக்களே முடிவு செய்வார்கள்!
காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “அடுத்த ஆண்டு செங்கோட்டையில் யார் உரை நிகழ்த்துவது என்பதை பொது மக்களே முடிவு செய்வார்கள். அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்” என்றார்.
மோடியால் ஊழலை கட்டுப்படுத்த முடியவில்லை!
மற்றொரு காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார், ”சிஏஜி அறிக்கைகளில் அம்பலமாகி வரும் தனது அரசாங்கத்தின் ஊழலை பிரதமர் மோடியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சுதந்திர தின பேச்சு வகுப்புக்கே வராத மாணவர் தொடர்ந்து தேர்ச்சி பெறுவதைப் பற்றி பேசுவது போன்று உள்ளது. மோடி பயப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
சாதனை பற்றி பேசாமல் விமர்சனம்!
ஆம் ஆத்மி எம்பி சுஷில் குமார் குப்தா கூறுகையில், “ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர் தனது சாதனை பற்றி பேசாமல் விமர்சித்து பேசியிருப்பது எனக்கு விசித்திரமாக உள்ளது. அடுத்த ஆண்டு யார் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் மக்கள் அதற்கு விடை கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”மோடி தேசிய கொடி ஏற்றுவார்…. ஆனால்”: மல்லிகார்ஜூனே கிண்டல்!
தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்