எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!

Published On:

| By Kavi

கலவரம் ஏற்பட்ட சம்பல் பகுதிக்கு போலீஸுடன் நான் மட்டும் செல்ல தயார் என்று கூறியும் என்னை அனுமதிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகாலயர் கால ஷாஹி ஜமா மஸ்ஜித் உள்ளது.
கடந்த 24ஆம் தேதி தொல்லியல் துறை இங்கு ஆய்வு மேற்கொண்ட போது வன்முறை வெடித்தது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

இந்த நிலையில் கலவரம் நடந்த பகுதியை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி எம்பியும் இன்று(டிசம்பர் 4) சம்பல் நகருக்கு புறப்பட்டனர்.

ஆனால் உத்தரப்பிரதேசம் செல்லும் வழியில் காசிபூர் பகுதியில் இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக அவர்கள் கலவரம் ஏற்பட்ட பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற ராகுல் காந்தி, போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்ல முயன்றோம். எங்களை அனுமதிக்க போலீசார் மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அங்கு செல்வதற்கு உரிமை இருக்கிறது.

ஆனால் போலீசார் என்னை தடுத்து நிறுத்துகிறார்கள். போலீசாருடன் தனியாக நான் அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதையும் ஏற்கவில்லை.
இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

நாங்கள் சம்பல் பகுதிக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது, மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்க்க விரும்புகிறோம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியிருக்கிற உரிமை மறுக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறார்கள்.

இதுதான் புதிய இந்தியாவா?” என்று அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை கையில் வைத்துக்கொண்டு ஆவேசமாக பேசினார்.

பிரியங்கா காந்தி கூறுகையில், “போலீசாருடன் தனியாக செல்ல தயார் என்று ராகுல் காந்தி கூறியபோதும் அவரை அனுமதிக்கவில்லை என்றால் அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் நிலைமை சமாளிக்க முடியாத வகையில் உள்ளதா?” என்ற கேள்வி எழுப்பினார்.

இருவரும் சம்பல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜய் – அண்ணாமலையை பாராட்டிய சீமான்

மகாராஷ்டிரா: பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share