ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் இன்று (அக்டோபர் 13) அதிகாலை டெல்லி வந்தடைந்தனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையேயான போர் 7-ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருவதால் இதுவரை 2400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆபரேஷன் அஜய் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் நேற்று டெல்லியிலிருந்து இஸ்ரேல் புறப்பட்டது.
இன்று அதிகாலை 212 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானமானது டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது. பயணிகளை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
முன்னதாக இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்களுக்காக டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
போரில் சிக்கியுள்ள இந்தியர்கள் 1800118797 , +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905, +919968291988 என்ற தொலைபேசி வாயிலாகவும் situationroom@mea.gov.in. மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை – சிங்கப்பூர்: தினசரி விமான சேவை எப்போது?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!