ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. .
இதை தடுக்கும் விதமாக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது தமிழக அரசு. அதன் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் நிரந்தர சட்டத்திற்கான மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுகுறித்து ஆளுநர் ரவி விளக்கம் கேட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாகவும், நேரில் சென்றும் விளக்கம் அளித்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு தெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா?
இக்கால இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தில் பெரும்பாலானோரை ஈர்க்கும் வகையில் செயலி வழியான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுவது வரைமுறை செய்யப்பட்டுள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், “பந்தயம் மற்றும் சூதாட்டம் உள்ளிட்டவை இந்திய அரசியலமைப்பின் 7வது பிரிவின் 2வது அட்டவணையின் கீழ் மாநில வரம்புக்குள் வரும் அங்கமாகும்.
அதன்படி, ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளே சட்டம் இயற்றி கொள்ளும் அதிகாரம் உள்ளது.
மேலும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகள் படி 2022 ஜூன் 13ம் தேதி முதல் 2022 அக்டோபர் 3ம் தேதி வரை செய்தி நிறுவனங்கள் டிஜிட்டல் இணையதளங்கள் மற்றும் OTT-களில் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது” என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலை.ரா
பேராசிரியர் விருது கோரிய வழக்கு: சென்னை பல்கலைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக: பதட்டத்தில் தூத்துக்குடி