கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதன் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவிகிதம் ஆக விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.40 விற்பனையாகிவரும் நிலையில், வெங்காய விலை நிலவரம் குறித்து ‘கிரிஸில்’ சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “வரும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம். வரத்து – தேவை ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும்.
ராபி பருவத்தில் அறுவடையாகும் வெங்காயங்களின் ஆயுட்காலம் சற்று குறைவுதான். ஒன்று முதல் இரண்டு மாதங்களில் அவை அழுகிவிடும். அது தவிர பிப்ரவரி – மார்ச் காலகட்டத்தில் வெங்காயத்தை பதற்றத்தில் வாங்கிக் குவித்தோர் அதிகம். வெளிச்சந்தையில் வெங்காய இருப்பு குறையத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் இறுதியில் கையிருப்பு வெகுவாகக் குறையும். இதனால் தட்டுப்பாடு காலம் 15 முதல் 20 நாட்கள் நீடிக்கும். இதன் விளைவாக வெங்காய விலை ஏறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவிகிதம் ஆக விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
உக்ரைன் மீது ரஷ்யாவின் பதிலடி: ஏழு பேர் பலி!
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே விரைவில் படகு சேவை: அமைச்சர் எ.வ.வேலு