ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் திட்டத்தில் புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மின்சார வாகன பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முக்கிய ஆதாரமான லித்தியம் கடந்த ஆண்டு இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) வங்காள விரிகுடாவில் எண்ணெய் கிணறுகளை தேடும் பணியில் ஈடுபட்டது.
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது 2 ஆம் கட்டம் இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடற்கரையில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (பிளாக் 98/2) முதல் ஆழ்கடல் எண்ணெய் வளத்தை ஓஎன்ஜிசி கண்டறிந்துள்ளது.
இதனை நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
ஒரு நாளைக்கு 45,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி!
அவர் கூறுகையில், “எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் நேற்று ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் முதல் எண்ணெய் எடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனை சாத்தியமாக்கிய ONGC மற்றும் அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.
ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் திட்டத்தில் இருந்து முதல்முறையாக எண்ணெய் எடுக்கும் பணி ஜனவரி 7ம் தேதி நடந்தது. அங்குள்ள 26 கிணறுகளில் 4 கிணறுகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
மிகக் குறுகிய காலத்தில் அதாவது 2 ஆம் கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் எரிவாயு கிடைத்துள்ளது மட்டுமின்றி 3 ஆம் கட்ட பணிகள் உச்ச நிலையில் இருக்கும் வரும் மே மற்றும் ஜூன் மாதத்திற்குள், ஒரு நாளைக்கு 45,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். இது நமது மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 7 சதவீதமாக இருக்கும்” என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
“ First Oil” flowed from KG basin offshore on 7th Jan 2024 , one of the most cherished moments for Country and ONGC family . We convey our heartfelt thanks to Ministry and GoI for supporting us 360 degree , from all sides . We are eagerly waiting to flow Oil and Gas to full…
— Chairman & CEO, Oil & Natural Gas Corporation Ltd. (@ChairmanONGC) January 9, 2024
மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று!
இதுகுறித்து ஓஎன்ஜிசி தலைவர் அருண்குமார் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “KG படுகையில் இருந்து “முதல் எண்ணெய்” எடுக்கப்பட்டது. இது நாடு மற்றும் ONGC குடும்பத்தின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும்.
அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைஅமைச்சகம் மற்றும் இந்திய அரசுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டின் மையத்தில் அனைத்து கிணறுகளிலிருந்தும் முழு கொள்ளளவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்வதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
காக்கிநாடாவில் உள்ள ஓஎன்ஜிசி குழுவும், பல இடங்களில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி ஊழியர்களும் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் சேர்ந்து எண்ணெய் கிணறுகள் செயல்பாட்டிற்கு வர கடுமையாக உழைத்தனர். அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடல் எண்ணெய் கிளப்பில் இந்தியா!
ஆக்ஸ்போர்டு நிறுவனத்தில் எரிவாயு சக்தி தலைவராக உள்ள நரேந்திர தனேஜா, ஓஎன் ஜிசியின் இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளார்.
அவர் கூறுகையில், “இந்தியாவின் எரிவாயு ஆற்றல் இருப்பைப் பாதுகாப்பதற்கும், குறைப்பதற்கும் இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப்பெரிய முன்னேற்ற படிக்கல்.
ஏனென்றால் உலகில் 7 அல்லது 8 நாடுகள் மட்டுமே ஆழ்கடலுக்குச் சென்று எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை அடையாளம் கண்டு பிரித்தெடுக்கத் தொடங்கும் திறன் மற்றும் நுட்பங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த கிளப்பில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது” என்று நரேந்திர தனேஜா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கார்த்தி சிதம்பரத்துக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ்: காங்கிரசில் என்ன நடக்கிறது?
திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!