இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இன்று (மார்ச் 14) குஜராத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகச் சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது எச்3என்2 வகை காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் எச்3என்2 காய்ச்சல் பரவியுள்ளது.
அண்மையில் திருச்சியில் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், எச்3என்2 வைரஸ் பாதிப்பும் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை, அவரது மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகே எச்3என்2 பாதிப்பு இருந்ததா என தெரியவரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதேசமயம் கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு எச்3என்2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதோடு ஹரியானா, பஞ்சாப், கர்நாடக ஆகிய மாநிலங்களில் மொத்தம் 6 பேர் இந்த காய்ச்சலால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் குஜராத்தில் இன்று எச்3என்2 பாதிப்பு காரணமாக 58 வயது பெண் உயிரிழந்துள்ளார். வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்தியாவில் எச்3என்2 பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
இந்தச்சூழலில் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் தாங்களாகவே கடைப்பிடித்துக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
பிரியா
ஆபாசம் நிறைந்த ‘ராணா நாயுடு’: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்!
வடமாநிலத்தவர்கள் விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு முன் ஜாமீன் மறுப்பு!