சீனாவில் இருந்து இந்தியா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இந்த ஆண்டு குறைந்திருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாகச் சீனாவில் பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை வைரஸ் தீயாகப் பரவி வருகிறது. இதற்குச் சீனாவில் ஒரு நாளுக்குச் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது.
இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுதல் எனப் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளைப் பரிசோதனை செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்தியா (ஆக்ரா) வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆக்ராவின் மூத்த மருத்துவ அதிகாரி ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அவருக்கு அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பதைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்ரா விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவருக்கு எந்த வகை கொரோனா பாதித்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காகப் பயணியின் சளி மாதிரிகள் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
வாரிசை தொடர்ந்து வாத்தி : லலித்குமாரின் திட்டம்!
இஸ்லாமிய ஆசிரியைக்காக, வீல்சேரில் சபரிமலை செல்லும் மாற்றுத் திறனாளி!