நகைக்காக 80 வயது பாட்டியை கொலை செய்து பீரோவில் பிணத்தை ஒளித்து வைத்துவிட்டு தப்பி ஓடிய இளம்பெண்ணை பெங்களூரு போலீஸ் தேடி வருகிறது.
பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் அத்திபலே காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நெரலூரு கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருபவர் ரமேஷ்.
மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காண ரமேஷின் தயான 80 வயதான பார்வதம்மா, கடந்த வாரம் தும்கூரு மாவட்டம் சிரா நகரில் இருந்து பெங்களூருவில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.
சில நாட்கள் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பார்வதம்மா கழித்து வந்த நிலையில் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியில் இருந்து அவரை காணவில்லை.
பார்வதம்மா காணாமல் போன நேரத்தில் அவரது மகன் ரமேஷ் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் வேலையில் இருந்துள்ளார். மருமகள் ஜோதி தனது மகன் மற்றும் மகளை டியூஷனில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.
ஜோதி குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்த போது பார்வதம்மாவை காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.
நள்ளிரவாகியும் தனது தாயை காணாததால் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். இதுகுறித்து அத்திபலே காவல்நிலைய ஆய்வாளர் விஸ்வநாத் விசாரணை நடத்தினார்.
அப்பொழுது ரமேஷ் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பாவல் கான் (வயது 25) என்ற பெண்ணும் தலைமறைவாக இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ் இரண்டாவது மாடியில் வசித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான பாவல் கானும் தனியாக மூன்றாவது மாடியில் ஒரு அறை எடுத்து அதில் வசித்து வந்துள்ளார்.
பார்வதம்மா காணாமல் போன அதே சமயத்தில் இருந்து பாவல்கானும் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், பாவல் கான் வீட்டை காவல்துறையினர் வழிகாட்டுதல் படி திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீட்டில் துணிகள் அடுக்கி வைக்க பொருத்தப்பட்டிருந்த கப்போர்டில் இருந்து அழுகிய வாடை வந்த நிலையில், அதை திறந்து பார்த்தபோது அதில் பார்வதம்மா கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் திணித்து வைக்கப்பட்டிருந்தார்.
பார்வதம்மா அணிந்து இருந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் காணவில்லை. பாவல்கான் பார்வதம்மாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவரை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு பிணத்தை கப்போர்டில் ஒளித்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
குறிப்பாக பார்வதம்மாவை கொலை செய்த பிறகு ரமேஷ் குமார் வீட்டில் எவ்வாறு அவரைத் தேடுகிறார்கள், வேறு என்னென்ன நடவடிக்கை அங்கு நடந்து வருகிறது என்பதை சில மணி நேரங்கள் பாவல் கான் அங்கிருந்து நோட்டமிட்டு இருக்கிறார்.
திருட்டு, கொலை என 302, மற்றும் 397 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இரண்டு தனிப்படைகளை அமைத்து தலைமறைவாக உள்ள பாவல் கானை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலை.ரா
இதெல்லாம் சரியல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
மிக அதிக மழை : தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்!