ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானா பகுதியை பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக விபத்து நடைபெற்ற இடத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
விபத்து குறித்து இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் இன்று மாலை 4.15 மணியளவில் பிரதமர் மோடி விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார்.
அவருடன் மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பாலசோர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் மோடி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார்.
செல்வம்
“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
எங்கெங்கும் உடல்கள்: விபத்தில் நேரில் சிக்கியவரின் நெஞ்சைச் சுடும் பதிவு!