ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது. எனினும் ரயில் விபத்துக்கான காரணம் என்னவென்று விரிவான விளக்கமாகவோ, தெளிவாகவோ ரயில்வே அமைச்சகம தெரிவிக்கவில்லை.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்து 275 பேர் உயிரிழந்திருக்கும் இந்த கோர விபத்து குறித்து விடை தெரியாத கேள்விகள் பல ஓடிக்கொண்டிருக்கின்றன.
விபத்து நடந்த பஹனகா பஜாரில் ரயில் தடங்கள் அப் லைன், டவுன் லைன், லூப் லைன் படி அமைக்கப்பட்டுள்ளன. அப் லைன் என்பது சென்னையை நோக்கி செல்லும் தடமாகும். டவுன் லைன் என்பது ஹவுராவை நோக்கி செல்லும் தடமாகும். இந்த இரண்டு மெயின் தடங்களின் இரு பக்கமும் இரு லூப் லைன்கள் உள்ளன.
ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாலசோரில் உள்ள சிறிய ரயில் நிலையத்தை தாண்டியதும் விபத்தில் சிக்கியிருக்கிறது. ரயில்வேயின் முதல்கட்ட தகவல்படி,
“கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து லூப் லைன் எனப்படும் இணைப்பு பாதையில் சென்று முன்னால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த பிரதான தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது எதிரே வந்த யஸ்வந்த்பூர் -ஹவுரா ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதன்படி மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின” என கூறுகிறது ரயில்வேயின் முதல்கட்ட விசாரணை தகவல்.
இந்நிலையில் இன்று (ஜூன் 4) விபத்து நடந்த இடத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே அமைச்சர், “ரயில் ட்ராக்கின் கட்டமைப்பை பாயிண்ட் மிஷினில் யாரோ மாத்தியிருக்கிறார்கள். இதுதான் மோதலுக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.
நாசவேலைகள் எதாவது நடந்திருக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை, “இப்போது எதுவும் சொல்ல முடியாது. சிஆர்எஸ் அறிக்கை வரும் முன் எதுவும் சொல்வது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
அமைச்சர் இவ்வாறு கூறியதன் மூலம், லூப் லைனுக்கு ட்ராக்கின் கட்டமைப்பை மாற்றிவிட்டது மனித பிழையா அல்லது வேண்டுமென்றே யாராவது செய்தார்களா, இதில் நாசவேலைக்கான சாத்தியக்கூறு உள்ளதா? எல பல கேள்விகள் எழுந்துள்ளன.
எனவே விரிவான விசாரணை மட்டுமே இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த விபத்து இந்தியாவில் ரயில் பயண பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய ரயில்வே துறை என்பது உலகின் மிகப் பெரிய துறைகளில் ஒன்றாகும். ரயில்வே தகவல்படி, நாடு முழுவதும் 63 ஆயிரம் மைல்கள், அதாவது ஒரு லட்சம் கிமீ தூரத்துக்கு தண்டவாளங்கள் உள்ளன. பல்வேறு வழித்தடங்களில் நாளொன்றுக்கு 2.5 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 5,200 கிமீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 8,000 கிலோமீட்டர் பாதைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 100 கிமீ வேகத்தில் ரயில்கள் செல்லும் வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் ரயில்கள் இப்படி தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
2019-20 ஆம் ஆண்டிற்கான அரசின் ரயில்வே பாதுகாப்பு அறிக்கை படி, 70% ரயில் விபத்துக்களுக்கு ரயில் தடம் புரண்டதே காரணம். 14 சதவிகிதம் தீ விபத்தாலும், 8 சதவிகிதம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
அந்த ஆண்டு மொத்தம் 33 பயணிகள் ரயில்கள், 7 சரக்கு ரயில்கள் என மொத்தம் 40 ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியிருக்கின்றன. இவற்றில் 17 ரயில் விபத்துக்கள் தண்டவாளத்தில் உள்ள குறைபாடுகளால் ஏற்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்கள் உலோகங்களால் செய்யப்பட்டது. இது வெயில் காலத்தில் விரிவடையும், குளிர்காலத்தில் சுருங்கும். இதன் காரணமாக தண்டவாளங்களில் விரிசல் ஏற்படும். எனவே ரயில் தண்டவாளங்களை அடிகடி ஆய்வு செய்வது அவசியமாகிறது.
இந்திய ரயில்கள் தடம் புரண்டது பற்றிய சிஏஜியின்(2021) அறிக்கை, தண்டவாளங்களை ஆய்வு செய்வதில் 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் குறைபாடு இருப்பதாக கூறுகிறது.
16 மண்டல ரயில்வேக்கு உட்பட்டு, 1129 ரயில்கள் தடம்புரண்ட பகுதிகளில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட அறிக்கைபடி, 171 விபத்துகள் தண்டவாளங்களை பராமரிக்க தவறியதே காரணம் என தணிக்கை அறிக்கை கூறுகிறது.
180 ரயில்கள் இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளன. மோசமாக லோகோ பைலட் மற்றும் அதிவேகம் ஆகியவை விபத்துக்கான மற்ற காரணிகள் என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
2010 – 2020 வரை, 156 கோர விபத்துகள் உட்பட 1302 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அறிக்கை சொல்கிறது.
இதுபோன்று தண்டவாளத்தில் குறைபாடு, சிக்னல் எர்ரர், மனித பிழை போன்ற காரணிகளால் இரண்டரை கோடி மக்கள் பயணிக்கும் ரயில்வே துறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே இனி வரும் காலங்களில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படாத வண்ணம் ரயில்வே துறையை மேம்படுத்துவது மிக மிக அவசியமானது என்பதே ரயில் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பிரியா
ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை : ரயில்வே அமைச்சர்!
ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!