“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

Published On:

| By Kavi

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் தப்பிய தமிழ்நாட்டு பயணிகள் சிலர் இன்று (ஜூன் 3) விமானம் முலம் சென்னை வந்தனர். 

அவர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பயணி ராஜலட்சுமி கூறுகையில், “நான் லயோலா கல்லூரியில் படிக்கிறேன். இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக கொல்கத்தா சென்றிருந்தேன். பயிற்சியை முடித்துவிட்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸில் திரும்பி வந்துகொண்டிருந்தேன். 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது. 

நான் பி8 பெட்டியில் இருந்தேன். இந்த பெட்டிக்கு பெரிய சேதம் இல்லை என்றாலும், உள்ளே இருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டனர். முகத்தில், கை, காலில் அடிபட்டதோடு தப்பித்துவிட்டோம்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வந்தது.

இன்ஜின் முதல் பி5 பெட்டி வரை அனைத்தும் பல்டி அடித்து கவிழ்ந்து விழுந்து கிடந்தன. ஒவ்வொரு பெட்டியும் ஒவ்வொரு விதமாக கிடந்தன. கீழே இறங்கி பார்த்த பிறகுதான் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது என்று தெரியவந்தது. 

ஷாலிமரில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் வேலை தேடி வந்தவர்கள் தான் நிறைய பேர். நான் வரும்போது ஒருவர் அழுதுகொண்டிருந்தார். 

அவரிடம் சென்று என்ன ஆனது என கேட்டேன்,  ‘என்னுடன் வந்தவருக்கு இதயம் வெளியே வந்து இறந்துவிட்டார்’ என்று சொன்னார்” என்றார். 

கொல்கத்தாவில் பணிபுரிந்து வரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ராகேந்திரன் கூறுகையில்,

“பாலசோரை கடந்து 28 கிமீ தூரத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அதன் சிக்னல் கோரமண்டல் எக்ஸ்பிரஸுக்கு கிடைக்கவில்லை. இது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்பதால் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. போன வேகத்தில் சரக்கு ரயில் மீது மோதாமல் லோகோ பைலட் ஒரு பிரேக் அடித்து மோதியதால் தான் இன்று நாங்கள் உயிரோடு இருக்கிறோம்.

இல்லை என்றால் எங்களின் நிலைமை என்ன ஆகியிருக்கும் என தெரியவில்லை.  பிரேக் அடித்ததும் கோரமண்டல் ரயிலின் இன்ஜின் சரக்கு ரயில் மீது ஏறி நின்றது. 

நமது ஊரில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் தான் அந்த பெட்டியில் ஏறுவார்கள், ஆனால் கிழக்கில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் ஏறிக்கொள்வார்கள். எனவே நெருக்கடியாக இருந்ததால் உயிரிழப்பு அதிகரித்தது. 

odisha train accident passengers pressmeet

நான் பயணித்த பெட்டிக்கு முன்னாள் ஏசி பெட்டி இருந்தது. அந்த பெட்டி கவிழ்ந்து விட்டது. நான் வந்த பெட்டி தடம் புரண்டு நின்றது. அந்த 5 நிமிடம் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தோம். கடவுளின் கிருபையால் உயிர் பிழைத்திருக்கிறோம்” என அந்த திக் திக் நிமிடங்கள் பற்றி கூறினார். 

மேலும் அவர்,  “பெங்களூருவில் இருந்து ஒரு ரயில் கொல்கத்தா வந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தது. சரக்கு ரயில் இந்த ரயிலுக்கு முன்னாள் சென்று நின்று கொண்டிருந்தது.

அது நிற்பதற்கான சிக்னல் நாங்கள் வந்த ரயில் லோகோ பைலெட்டுக்கு கிடைத்ததா இல்லையா என தெரியவில்லை. இதனால் தான் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது” என்றார். 

பிரியா

ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள்!

விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டவர்: ஸ்பாட்டுக்கு சென்ற தமிழக அதிகாரி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment