176 மூட்டைகள்… 300 கோடிக்கு மேல்… பணத்தை எண்ணி பழுதான மெஷின்கள்! கரன்சி குவித்த காங்கிரஸ் எம்.பி. யார் இந்த தீரஜ் சாஹு?

இந்தியா சிறப்புக் கட்டுரை

காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவிடம் இருந்து இதுவரை ரூபாய் 300 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புகழ்பெற்ற பால்டியோ சாஹூ குழுமத்துக்கு சொந்தமான மேற்கு ஒடிசாவில் உள்ள பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலையின் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

இதையடுத்து சம்பல்பூர், போலங்கிர், திதிலாகர், பௌத், சுந்தர்கர், ரூர்கேலா, புவனேஸ்வர் போன்ற இடங்களில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 6) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தீரஜ் பிரசாத் சாஹு

அந்த மதுபான நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கும் (64) தொடர்புண்டு என்பதால் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 7) சோதனை நடத்தியது.

176 பண மூட்டைகள்- 40 மெஷின்கள்

இதில் தீரஜ்க்கு சொந்தமான போலங்கிர் மாவட்டம் சுடாபாடா பகுதியில் உள்ள மறைவிடத்தில் இருந்து, 176 பைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரொக்க பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  தொடர்ந்து நான்கு நாட்களாக இந்த பணம் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 40 பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஐ உள்ளிட்ட 3 வங்கிகளில் இருந்து 50 அலுவலர்கள், 150 வருமான வரித்துறை அதிகாரிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். என்றாலும் இதுவரை சிக்கிய மொத்த பணத்தையும் எண்ணி முடிக்க முடியவில்லை.  இந்த பணம் எண்ணுகின்ற பணியில் அடிக்கடி மெஷின்களும் பழுதடைந்து விடுவதால் தான் பணத்தை எண்ணுவதற்கு அதிக நேரம் பிடிக்கிறதாம்.

பணத்தை எண்ணுவது, அதை வாகனங்களில் வங்கிகளுக்கு எடுத்து செல்வது என வங்கி அலுவலர்களும், அதிகாரிகளும் நான்கு நாட்களாக மிகுந்த பிசியாக இருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட எல்லாமே 500 ரூபாய் நோட்டுகளாக இருப்பதால் கைப்பற்றப்படும் பணத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனையில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் ஒரே கட்டத்தில் கைப்பற்றப்படுவது இந்தியளவில் இதுவே முதன்முறையாகும்.

இதனால் இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தீரஜ் பிரசாத் சாஹு

இவ்வளவு பரபரப்புக்கும் சொந்தமான தீரஜ் பிரசாத் சாஹு யார்? ஏது அவருக்கு இவ்வளவு பணம்?

1955-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி ராஞ்சியில் பிறந்தார். தந்தையின் பெயர் ராய் சாஹேப் பல்தேவ் சாஹூ தாயின் பெயர் சுசீலா தேவி.

1977-ம் ஆண்டு தீரஜ் தன்னுடைய 22-வது வயதில் காங்கிரஸில் சேர்ந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பாரம்பரியமான வணிக குடும்பத்தில் இருந்து வந்த தீரஜ் காங்கிரஸ் சார்பில் எம்பியாக பதவி வகிப்பது இது மூன்றாவது முறையாகும்.

சொத்து மதிப்பு

2018-ம் ஆண்டு தேர்தலில் நிற்பதற்காக அவர் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் தன்னுடைய மொத்த சொத்தின் மதிப்பு 34.83 கோடி என குறிப்பிட்டுள்ளார்.   தன்மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை என அந்த பத்திரத்தில் குறிப்பிட்ட அவர் ரேஞ்ச் ரோவர், ஃபார்ச்சூனர், பிஎம்டபிள்யூ மற்றும் பஜெரோ ஆகிய கார்களை பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ் குடும்பம்

நீண்ட வருடங்களாக தீரஜ் சாஹுவின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தீரஜின் சகோதரர் சிவபிரசாத் சாஹுவும் இரண்டு முறை காங்கிரஸ் எம்பியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிய 176 பண மூட்டைகளில் தற்போது வரை சுமார் 140 பண மூட்டைகள் எண்ணப்பட்டு இருக்கின்றன. இதில் சுமார் 300 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.

மீதமிருக்கும் பண மூட்டைகளை எண்ணினால் இந்த மொத்த பணத்தின் மதிப்பு 350 கோடியாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக Vs காங்கிரஸ்

தீரஜ் சாஹுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என பாஜகவினரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தளத்தில், ”நீங்களும், உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. அரச குடும்பம் என்ற பெயரில் இங்கே பொதுமக்களை சுரண்ட முடியாது. நீங்கள் ஓடி சோர்வடைந்து விடுவீர்கள்.

ஆனாலும் சட்டம் தனது கடமையை செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்ப பெறப்படும்” என தெரிவித்து இருக்கிறார்.

எனவே இதன் தாக்கம் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

தயாரிப்பாளராகும் நெல்சன் :ஹீரோ கவின், ஹீரோயின் பிரியங்கா மோகன்?

சபரிமலை தரிசன நேரம் : முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
2
+1
0

1 thought on “176 மூட்டைகள்… 300 கோடிக்கு மேல்… பணத்தை எண்ணி பழுதான மெஷின்கள்! கரன்சி குவித்த காங்கிரஸ் எம்.பி. யார் இந்த தீரஜ் சாஹு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *