ஒடிசாவில் ரயில்கள் மோதிக் கொண்டு ஏற்பட்ட கோர விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஒடிசா பாலசோர் அருகே நடந்த ரயில் விபத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். முதலில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் தான் தடம் புரண்டது என்று தகவல் வெளியானது.
அடுத்து அதே வழியில் வந்த சரக்கு ரயிலும் கோரமண்டல் ரயிலும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தி இந்து தகவல்படி, இந்த விபத்து இரவு 7 மணியளவில் நடைபெற்றுள்ளது. 12864 (SMVB-HWH) யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது.
தடம் புரண்ட இந்த ரயிலின் 2 பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளது. அப்போது எதிரே வந்த 12841 கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் அந்த ரயிலின் 17 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
அதேசமயத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது சரக்கு ரயிலின் வேகன்கள் மோதி அந்த ரயிலும் விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் இரண்டு ரயில்களில் பயணிகள் பயணித்து வந்ததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது, இந்த இடம் தற்போது விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சென்னை கோரமண்டல் ரயில் விபத்து : 30 பேர் பலி?
ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்!