டைட்டானிக் கப்பலை பார்வையிட கடலுக்கடியில் சுற்றுலா சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் சுற்றுலா குறித்து ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு நேர்ந்த கோர விபத்தில் கடலுக்கு அடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பல ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு கடந்த 1985ஆம் ஆண்டு, சர்வதேச கடல் எல்லையில் 12,400 அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அந்த சிதிலங்களை சுற்றி பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ஓஷன் கேட் எனும் நிறுவனம் பொதுமக்களை கடலுக்குள் அடியில் அழைத்துச் சென்று டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை சுற்றிக்காட்டுவதாக அறிவித்தது.
இந்த சுற்றுலாவிற்கு இந்திய மதிப்பில் தலா 2 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறிய அளவிலான நீர்மூழ்கி கப்பலில், சுற்றுலா சென்ற 5 பேர் கொண்ட குழு விபத்தில் சிக்கியது.
அந்த கப்பலில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போதுமான மற்றும் முறையான அறிவியல் பூர்வமான பரிசோதனைகளை ஓஷன் கேட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்பது விபத்திற்குப் பிறகு தான் தெரியவந்தது. இதனால், அந்த நிறுவனத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலை காண செல்வதற்கான சுற்றுலா விளம்பரத்தை ஓஷன் கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 பேர் பலியான சோகமே இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் அடுத்த ஆண்டு டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்ப்பதற்கான பயணம் மேற்கொள்ளப்படும்.
விருப்பம் உள்ள 17 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேல் உள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் 12ல் தொடங்கி ஜூன் 20 வரை ஒரு குழுவும், ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரை மற்றொரு குழுவும் சுற்றுலா செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
மாமன்னன்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு : நீதிமன்றத்தில் மனு!