கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 742 பேர் சரணடைந்துள்ளதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை (அக்டோபர் 7) நடைபெற்றது.
இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதியோ சாய், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “சத்தீஸ்கர் மாநில முதல்வர், உள் துறை அமைச்சர், காவல் துறை தலைமை இயக்குநர் என மாநிலத்தின் அனைத்து உயரதிகாரிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 194 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 742 பேர் சரணடைந்துள்ளனர்.
நக்சல் அமைப்புடன் தொடர்பிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுவாழ்க்கையில் இணைய வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு – காஷ்மீரில் 13,000 பேர் ஆயுதங்களைக் கைவிட்டு நக்சல் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்காக 2004 – 2014 வரை ரூ.1,180 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014 – 2024 வரை ரூ.3,006 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு முன்பு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை இரண்டாக இருந்தது. ஆனால் தற்போது பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு ஹெலிகாப்டர்கள் எல்லைப் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை வரை!
கிச்சன் கீர்த்தனா : பைனாப்பிள் பூந்தி
இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு
சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!