நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு கடந்த ஜூலை 8-ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் தேர்வு தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்தநிலையில், தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், “நீட் வினாத்தாள் தேர்வு மையங்களில் காணாமல் போகவில்லை. ஒவ்வொரு வினாத்தாளும் தனிப்பட்ட வரிசை எண்களுடன் தேர்வர்களுக்கு கொடுக்கப்பட்டது.
வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களில் பூட்டுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. எந்த ஒரு அசம்பாவித சம்பவமோ, வினாத்தாள் கசிவோ நடைபெறவில்லை.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும்
டெலிகிராமில் வெளியான நீட் வினாத்தாள் போலியானது. இன்றைய டிஜிட்டல் உலகில் போலி புகைப்படங்களை உருவாக்குவது என்பது மிகவும் எளிமையான ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை: இந்த பங்குகளுக்கு செம்ம டிமாண்ட்!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு!