பணமதிப்பழிப்பு நடவடிக்கை: முன்னாள் நிதி ஆயோக் அதிகாரி அதிரடி கருத்து!
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் அனைத்தையும் சாதிக்கமுடியவில்லை என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையினா பாஜக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று (ஜனவரி 2) 4:1 என்ற கணக்கில் பண மதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
4 நீதிபதிகள் மத்திய அரசு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், நீதிபதி பி.வி.நாகரத்தினா மட்டும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில், நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் அனைத்தையும் சாதிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பணமதிப்பழிப்பு தீர்ப்பு குறித்து நேற்று என்.டி.டி.வி-க்கு அவர் அளித்த பேட்டியில்,
“ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பணமதிப்பழிப்பு நடவடிக்கை எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதை மேற்கொண்டபோது அது மதிப்புக்குரியது என்று நான் உறுதியாக நம்பினேன். தற்போது டிஜிட்டல் மயமாக்கலால் நிறைய விஷயங்கள் மாறியுள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நான் மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டேன். அது செய்யப்பட்ட நோக்கம் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் அனைத்தையும் சாதிக்க முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மார்ச் 2022-இல் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மதிப்பு, 2016-இல் ரூ.6,952 கோடியில் இருந்து, 2022 அக்டோபரில் ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செல்வம்
வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!