ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும் என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். பரஸ்பர நல்லுறவுக்காக சுமார் 4 முதல் 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்யாவின் தென் கிழக்கில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்த பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது.
இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ரஷ்யா – உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, “ரஷ்யா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டுக்குத் தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்” என கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
ரஷ்யா உடனான வடகொரியாவின் நெருக்கத்தை ஏற்கனவே அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஆயுத பேச்சு வார்த்தைகள் முறையான போக்கு அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது.
வட கொரியாவிடம் தற்போது 6,500 ராணுவ டாங்கிகள், 3,000 எம்எல்ஆர்எஸ் ராக்கெட்டுகள் மற்றும் 30 அணு ஆயுதங்கள், 519 போர் கப்பல்கள், 947 போர் விமானங்கள் உள்ளன. மறுபக்கம் ரஷ்யாவிடம், 5,889 ஆணு ஆயுதங்கள், 12,500 டாங்கிகள், மற்றும் 4,000 எம்எல்ஆர்எஸ் ராக்கெட்டுகள், 4,182 போர் விமானங்கள், 598 போர் கப்பல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது!
மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!