ரஷ்யாவில் அணு ஆயுத விமானங்களை ஆய்வு செய்த கிம் ஜாங் உன்!
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், நேற்று (செப்டம்பர் 17) விளாடிவோஸ்டோக்கில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவுக்குத் தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன்பிறகு ரஷ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், நேற்று விளாடிவோஸ்டோக்கில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.
குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷ்யாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வட கொரியா ரஷ்யாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அடுத்ததாக ரஷ்யாவின் கப்பற்படைக்குச் சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷ்யாவின் தொழில்நுட்பத்தை வட கொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் போரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷ்யாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வட கொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணையாக ரஷ்யா திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜ்
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ரயான்!
சிலை காணும் சிலம்பொலி ! ஸ்ரீராம் சர்மா