அயோத்தியைச் சுற்றியுள்ள 15 கி.மீ புனித யாத்திரை பாதையில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்கிற நிலையில் கேஎஃப்சி அயோத்தியில் விற்பனையைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே அயோத்தி சுற்றுலா தலமாக மாறி வருகிறது. ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உணவு கடைகளை அமைத்தால் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதால் பல உணவு நிறுவனங்களும் அயோத்தியில் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டு வருகின்றன.
ராமர் கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ‘பீட்சா ஹட்’ உணவு நிலையங்களில் நல்ல வியாபாரம் நடக்கிறது. பீட்சா ஹட் சைவ உணவை மட்டும் அங்கு வழங்கி வருகிறது. கோயிலுக்கு அருகில் உணவு கடைகள் இல்லை என்று பலரும் புலம்புகின்ற நிலையில் கேஎஃப்சி-யும் அயோத்தியில் விற்பனையைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அயோத்தியை பொறுத்தவரையில் `பஞ்ச் கோசி பரிக்ரமா’ (Panch Kosi Parikrama) என அழைக்கப்படும் அயோத்தியைச் சுற்றியுள்ள 15 கி.மீ புனித யாத்திரை பாதையில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்பதால் இதில் சிக்கல் உள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்குள் மதுபானங்கள் மற்றும் இறைச்சி வழங்கப்பட கூடாது.
அயோத்திக்கு வெளியே அயோத்தி டு லக்னோ நெடுஞ்சாலையில் கேஎஃப்சி வழக்கமான அசைவ மெனுக்களோடு இயங்கி வருகிறது. இந்த நிலையில் கேஎஃப்சி-யின் மெனுவை மாற்றினால், கேஎஃப்சியை ஊருக்குள் வரவேற்க அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அயோத்தியில் உள்ள அரசு அதிகாரி விஷால் சிங், “அயோத்தியில் கடைகளை அமைக்க பெரிய உணவு நிறுவனங்களுக்கு சலுகைகள் உள்ளன. அவர்களை நாங்கள் இரு கரங்களை நீட்டி வரவேற்கிறோம். ஆனால், ஒரே ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் அசைவ உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. சைவ உணவுகளை மட்டும் விற்க முடிவு செய்தால் கேஎஃப்சிக்கு கூட இடமளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஹெல்த் டிப்ஸ் : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்?