உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின், எமரால்ட் இரட்டை கோபுரங்கள் இன்று (ஆகஸ்ட் 28 ) உள்வெடிப்பு முறையில் 10 நொடிகளுக்குள் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.
இன்று (ஆகஸ்ட் 28 ) பிற்பகல் 2.30 மணியளவில் உள்வெடிப்பு முறையில் இந்த பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன.
கட்டிடத்தை இடிப்பதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டிடத்தில் 915 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 633 குடியிருப்புகள் புக் செய்யப்பட்டன.
குடியிருப்பை வாங்கியவர்களுக்கு வட்டியுடன் முழு தொகையையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார், 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் அப்பகுதியில் குவிந்துள்ளது. இதனை 3,000 லாரிகளில் அகற்றுவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எமரால்ட் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டதையடுத்து அந்த இடம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கட்டிடக் கழிவுகள் அந்த இடத்தில் மலை போல் குவிந்துள்ளது.
அங்கு காற்றில் பரவும் தூசியை அகற்ற காற்றில் நீர் துளிகளை தெளிக்கும் தானியங்கி துப்பாக்கிகள் பயன்படுத்துப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நொய்டா போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது , ”இந்த கட்டிட இடிப்பில் பெரிய அளவிலான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கு இடிப்பிற்கு பிந்தைய சூழலை அங்கு உள்ள நிபுணர்கள் மட்டுமே கண்டறிய முடியும்” என்று கூறினார்.
இது குறித்து நொய்டா மாவட்ட அதிகாரி ரித்து மகேஸ்வரி கூறுகையில், ”அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எந்த சேதமும் இல்லை . கட்டிட இடிப்பில் ஏற்பட்ட கழிவுகள் மட்டும் தற்போது சாலைகளில் கிடக்கிறது.
கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சில மணி நேரத்தில் அது குறித்த நல்ல தகவல் கிடைக்கும்.
துப்புரவு பணிகள் நடைபெற்று வருகின்றன, அப்பகுதியில் எரிவாயு மற்றும் மின்சாரம் சீரமைக்கப்படும், மாலை 6.30 மணிக்குப் பிறகு அவர்களுடைய குடியிருப்புகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நொய்டா இரட்டை கோபுர இடிப்பு: எட்டு வருட தாமதம் ஏன்?