உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அனுமதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இன்று (ஆகஸ்ட் 28) மதியம் 2.30 மணியளவில் 9 விநாடிகளில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சி அளிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ட்வின் டவர் எனப்படும் இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க 3700 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
கோபுரத்தில் உள்ள சுமார் 7000 துளைகளில் வெடி மருந்துகள் நிரப்பப்பட்டது. இதனை நீர்வீழ்ச்சி தொழில்நுட்பம் என்று அழைக்கின்றனர்.
கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு, அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் 7000 மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
2500 வாகனங்கள் கட்டடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டன. அருகிலிருக்கும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு சேவை நிறுத்தப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில், வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட இரட்டை கோபுர கட்டடம் 9 விநாடிகளில் தகர்க்கப்பட்டது.
காற்றின் வேகத்தைப் பொறுத்து தூசி விலக 12 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதன் மூலம் 55 ஆயிரன் டன் குப்பைகள் உருவாகலாம். இந்த குப்பைகளை அகற்ற மூன்று மாதங்கள் ஆகும். இந்த குப்பைகள் அனைத்தும் தனியாக ஒரு பகுதியில் கொட்டப்படும்.
கட்டட வெடிப்பு காரணமாக ஒரு சில விநாடிகளுக்கு 30 மீட்டர் சுற்றளவில் அதிர்வுகள் இருக்கும். இது ரிக்டர் அளவுகோலில் 0.4 அளவிலான நிலநடுக்கம் போன்று இருக்கும் என்று கட்டடத்தை இடிப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்..
கட்டடம் தகர்க்கப்பட்ட நிலையில், 4 மணிக்கு பின்னர் குடியிருப்புகளுக்கு மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு பின்னர் குடியிருப்பாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
செல்வம்
நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு: குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்!