இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அமைப்பு அவசியம் என்றும், கொலீஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலீஜியம்.
இந்த கொலீஜியம் முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீதிபதிகளே சக நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி வருகிறார்.
நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மதுரையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் நடந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு,
“இந்தியாவில் கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. ரகசியம் காக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் நீதிபதிகளாக வருகின்றனர்.
இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்துக்கு தேசிய நீதிபதிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் மூன்று நீதிபதிகள், நீதிபதிகள் அல்லாத மூன்று பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் ஒருவர் சட்ட அமைச்சர்.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவரும் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர். இதனால் நீதிபதிகளின் பெரும்பான்மை குறையும், இதனால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்படும் என ஆணையத்தை வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
நீதிபதிகளின் பெரும்பான்மை குறையும் என்றால் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். நீதிபதிகள் நியமனத்துக்கு நிரந்தர அமைப்பு இருக்க வேண்டும்.
இந்தியாவில் 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 36 உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு தனி அமைப்பு அவசியம்.
முன்சீப் நியமனத்துக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடுகிறது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு, இறுதியாக போலீஸ் அறிக்கை பெறப்பட்டு முன்சீப் நியமிக்கப்படுகிறார்.
முன்சீப் நியமனத்துக்கு இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கும்போது யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்ற நீதிபதியாக வரலாம் என்றால் எப்படி சரியாக இருக்க முடியும்.
இதனால் நீதிபதிகள் நியமனத்துக்கு நிரந்தர அமைப்பு அவசியம். மேலும் அதற்கு தனி செயலகம், போதுமான ஊழியர்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஒளிவு மறைவில்லாமல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
யார் வேண்டுமானாலும் நீதிபதிகளாக வரலாம் என்பதும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறை இந்தியாவை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை.
நீதிபதிகள் தாங்களாகவே ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத விஷயத்தை கையில் எடுத்து, நாங்கள் தான் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கிறோம், இது தான் அரசியலமைப்புச் சட்டம் என்றால் அது அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகம்” என்று கூறியுள்ளார்.
ராஜ்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!
8 நாட்களில் 75 கோடி வசூல் செய்த வாத்தி!
லட்சுமி மேனனின் புதிய பட அப்டேட்!