பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ‘ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் இருந்து யாராலும் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.
மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் தனது பாதுகாப்புப் படை மற்றும் ரிசர்வ் படைகளை அதிரடியாக களத்தில் இறக்கியது.
ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்தப் போர் நேற்றோடு 100-வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை இந்தப் போரால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 23,000-த்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் இருந்து யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
மேலும் எகிப்துடனான காஸா பகுதியின் பிலடெல்ஃபி எல்லையை இஸ்ரேல் ராணுவம் கையகப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: பல் சொத்தையைத் தடுக்க எளிய வழி!