வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய நிதியமைச்சகம் இன்று (ஏப்ரல் 1) விளக்கமளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருமான வரி செலுத்துவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் விளக்க அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், “வருமான வரி செலுத்தும் புதிய முறை என்பது கடந்தாண்டு நிதி சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும்.
மேலும், வரி செலுத்தும் பழைய முறையில் சலுகைகள் இல்லாமல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருமான வரி செலுத்தும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.
வருமான வரி செலுத்தும் புதிய முறை நிறுவனங்களுக்காக இல்லாமல் தனிநபர்கள் பயனடையும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்த வருமான வரி செலுத்தும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை தற்போதைய 2024-25 நிதியாண்டிலும் தொடரும்” என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரி செலுத்தும் பழைய முறையில் ஸ்டான்டர்ட் டிடெக்சன் எனப்படும் தொகை, ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம், குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரம் மற்றும் எல்.ஐ.சி., வீட்டுக்கடன், வாடகை உள்ளிட்டவை கட்டியது போக மீதமுள்ள தொகை வரிக்கு உட்படுத்தப்படும்.
ஆனால், புதிய முறையில் எந்தவித சலுகைகளும் இருக்காது. மேலும், பழைய முறையில் இருந்த வருமான வரியை விட குறைவாக செலுத்தும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக ஒருவர் வரி செலுத்த விரும்பினால், அவர் புதிய முறையை கூட தேர்வு செய்யும் வகையில் இந்த அம்சம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முறை வேண்டுமா, வேண்டாமா என்பதை வரி செலுத்துபவரே முடிவு செய்யும் வகையில் மத்திய நிதியமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டும் வரி செலுத்தும் முறையை மாற்றி தேர்வு செய்யும் வசதியை அப்படியே வைத்திருப்பதாகவும், எந்த வகையில் வரி செலுத்த வேண்டும் என்பதை மக்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பழைய வருமான வரி முறையின்படி, “2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம். 2.5 முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
5-10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.”
ஆனால், புதிய வருமான வரி முறையின்படி, “3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரியை செலுத்த வேண்டாம். 3-6 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
6-9 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 10 சதவீதமும், 9-12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 15 சதவீதமும், 12-15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதமும் வருமான வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!
கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ், திமுக மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!