மும்பை அகமதாபாத் நகரங்களுக்கிடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஷிங்கா ஷென் வகை புல்லட் ரயிலை இந்த பாதையில் இயக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக 2030 ஆம் ஆண்டு வரை ஷிங்கா ஷென் ரயில் இந்த பாதையில் இயக்கப்படாது.
மாறாக வந்தேபாரத் ரயில்களின் வேகத்தை 250 கி.மீக்கு உயர்த்தி இந்த பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 2 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, வந்தேபாரத் ரயில்கள் அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
மும்பை அகமதாபாத் நகரங்களுக்கிடையே ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 88 ஆயிரம் கோடி ஜப்பான் கடனாக அளித்துள்ளது. ஒரு சதவிகித வட்டி செலுத்தினால் போதுமானது. 50 ஆண்டுகளில் இந்த கடனை அடைக்க வேண்டும். புல்லட் ரயில்பாதை அமைப்பதற்கான தொழில்நுட்பங்களையும் ஜப்பான் அளித்துள்ளது.
ஜப்பானில் ஷிங்காஷென் புல்லட் ரயில்கள் 350 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியவை. ஆனால், இந்தியாவில் இந்த ரயில்கள் 250 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்படவுள்ளன. புல்லட் ரயில்கள் வரும் வரை இந்த பாதையில் வந்தேபாரத் ரயில்களை 2026 ஆம் ஆண்டு முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் 6 புல்லட் ரயில் பாதை அமைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.