பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வயதாகிவிட்டதால் பதட்டத்தில் பேசுகிறார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியை தொடங்குவதற்காக ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் ஜன் சுராஜ் என்ற பெயரில் 3,500 கி.மீ பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தனது நடைபயணத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி பீகார் பித்திவாரா காந்தி ஆஷ்ரமத்தில் துவங்கினார். நாடு முழுவதும் 18 மாதங்கள் பிரசாந்த் கிஷோர் நடைபயணம் செய்ய உள்ளார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அக்டோபர் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த போது,
“பிரசாந்த் கிஷோர் பாஜகவிற்காக வேலை செய்கிறார். 5 வருடங்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்படி என்னிடம் கூறினார்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 9) பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர்,
“பாஜகவிற்கு வேலை செய்தால் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நான் ஏன் நிதிஷ்குமாரிடம் பேச வேண்டும்.
அவர் மாயை உலகத்தில் இருக்கிறார். அவருக்கு வயதாகிவிட்டதால் பதட்டத்தில் பேசுகிறார். அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு நம்பிக்கை இல்லாதவர்களை அவருடன் வைத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நிதிஷ் பதட்டத்தில் பேசுகிறார்.” என்றார்
பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தேசிய துணை தலைவராக இருந்தார். பின்னர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி… அதுதான் என் நிலைமை : மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினை பார்த்து கலைஞரும் பேராசிரியரும் சொன்னது இதுதான் : எ.வ.வேலு