மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வெடிகுண்டு மிரட்டல் வந்தது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று (டிசம்பர் 26) காலை 10.50 மணி மற்றும் மதியம் 1.30 மணிக்கு khilafat.india@gmail.com என்ற இமெயில் ஐடியில் இருந்து ஆர்பிஐ கவர்னர் மின்னஞ்சலுக்கு இமெயில்கள் வந்துள்ளன.
“பிரேக்கிங் நியூஸ்” என்ற தலைப்புடன் வந்த மின்னஞ்சலில் மும்பை கோட்டையில் உள்ள ரிசர்வ் வங்கியின் புதிய மத்திய அலுவலகக் கட்டிடத்தில் 3 வெடிகுண்டுகள், சர்ச்கேட் பகுதியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி, டவர்ஸ் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஐசிஐசிஐ வங்கிகளில் குண்டுகள் வெடிக்கும்.
மும்பையில் ஆர்பிஐ மற்றும் தனியார் வங்கிகள் உட்பட மொத்தம் 11 இடங்களில் குண்டுகளை வெடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளனர்.
இந்த மோசடியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் சில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தாக மும்பை போலீசார் கூறுகின்றனர்.
இந்த மிரட்டலை தொடந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 505-1 பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனைகளில் ஈடுபட்டனர்.
ஆனால் சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. எனினும் வங்கிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் சிகிச்சை!
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!