நீரவ் மோடியை நாடு கடத்த உத்தரவு!

இந்தியா

மனநிலை பாதிப்பு கதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக ரூ.13,500 கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாமல் நீரவ் மோடி மோசடி செய்தார்.

இந்த விஷயம் அம்பலமானதும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து விஜய் மல்லையாவைப் போலவே இவரும் லண்டனுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சமடைந்தார்.

2018இல் லண்டனுக்குத் தப்பியவரை இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறையும் சிபிஐயும் எடுத்து வருகிறது. லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி பல முறை ஜாமீன் கேட்டும் நீதிமன்றம் அனுமதி தரவில்லை.

இதற்கிடையில் நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இதை விசாரித்த நீதிபதி சாம் கூஸ் பொருளாதார குற்றவாளி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீரவ் மோடி தரப்பு லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நீரவ் மோடிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு கடத்தக் கூடாது எனக் கோரிக்கை வைத்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெரிமி ஸ்டூவர்ட் ஸ்மித் மற்றும் ராபர்ட் ஜே ஆகியோர் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மனநிலை பாதிப்பு கதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நீரவ் மோடியை விரைவாக இந்தியா கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி,

“இந்தியாவில் பண மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

நாடு கடத்தப்படுவதற்கு எதிரான நீரவ் மோடியின் மனுவைத் தள்ளுபடி செய்த இங்கிலாந்து நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது.

எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக நீரவ் மோடி இந்தியா கொண்டு வரப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

கன மழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

திருப்பதி: ரூ.300 டிக்கெட் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *