கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், அவர்களில் 122 பேர் அதிக ஆபத்தான பிரிவில் இருப்பதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 29 பேர் மலப்புறம், கண்ணூர், திரிசூர் மற்றும் வயநாடு என மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நிபா வைரஸ் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்த நிபா வைரஸ், கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது என அந்த கவுன்சில் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு சதவீதம் 2-3% மட்டுமே இருந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு சதவீதம் 40-70% என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய இந்த வைரஸ், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கும், உணவுகள் மூலமாகவும் பரவும் தன்மை கொண்டது எனவும் ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பரவலுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ராஜேஷ் பாஹல், “நிபா வைரஸ்க்கு எதிரான மோனாக்ளோனல் ஆன்டிபாடி மருத்துகள், தற்போது 10 நோயாளிகளுக்கு வழங்கும் அளவிற்கு மட்டுமே கையிருப்பில் உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் இருந்து கூடுதல் மருந்துகளை இறக்குமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது”, என தெரிவித்துள்ளார். மேலும், இந்த மருந்துகளை வைரஸ் பாதித்த துவக்க காலத்திலேயே வழங்கினால் மட்டுமே அது பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, தலை சுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு மற்றும் மயால்ஜியா ஆகியவை நிபா வைரஸ் பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகளாக அறியப்படுகின்றன. இந்த வைரஸின் பாதிப்பு உடலில் தீவிரமாகும் பட்சத்தில், அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அது மிக தீவிரமடையும் சமயத்தில், தீவிர சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
முரளி
Asia cup: 11 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திடம் ’தோல்வி வடு’ கண்ட இந்தியா
தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!