பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் மீண்டும் இன்று (செப்டம்பர் 27) தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, நிதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தெலங்கானாவில் கடந்த வாரம் என்.ஐ.ஏ சோதனையில் ஈடுபட்டது.
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி 95 இடங்களில் சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் தமிழகத்தில் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமையின் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது.
இந்த சூழலில் இன்று(செப்டம்பர் 27) நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுவதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, அசாம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சோதனை நடந்து வருகிறது.
என்.ஐ.ஏ சோதனை எதிரொலியாக டெல்லி ஜாமியா பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் இதுவரை 6 பேரும், கர்நாடகாவில் 45க்கும் மேற்பட்டவர்களும், அசாமில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த 8 மாநிலங்களில் சோதனை நடந்து வருகிறது.
பிரியா