தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாத அமைப்புக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி கடந்த வாரம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 22) தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சென்னை, திண்டுக்கல் , கோவை என பல இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த அமைப்பின் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகின்றன
சென்னையில், புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் இந்த செயலைக் கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சோதனை நடைபெறும் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுஃப் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக கேரளாவில் வைத்து யூசுஃப் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 3 வது மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் அலுவலகத்தில் அதிகாலை 3 மணி முதல் சோதனை நடந்து வருகிறது.
சோதனையை முன்னிட்டு அதிவேக அதிரடிபடை மற்றும் திண்டுக்கல் போலீசார் என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு திரண்டு சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அலுவலகத்தில் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்ட பொது செயலாளர் மற்றும் மாநில மீனவர் அணித் தலைவர் பரக்கத்துல்லா (40) வீட்டில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள பண்பொழியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முத்துத் தேவன் பட்டியில் செயல்படும் அறிவகம் என்ற மதரசாவில் சோதனை நடந்து வருகிறது. கம்பம் பகுதியில் உள்ள யாசர் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சி புரத்தில் உள்ள மதரசாவில் சோதனை நடைபெறுகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே மஞ்சேரியில் உள்ள பிஎஃப்ஐ தலைவர் ஓ.எம்.ஏ சலாமின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர பயிற்சி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருவதாக என்..ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் பணப் பரிவர்த்தனை தொடர்பாகப் பல இடங்களில் உள்ள இந்த அமைப்புக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி வருகிறது.
அதன்படி அமலாக்கத் துறையும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் சேர்ந்து நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம் என 10 மாநிலங்களில் ஒரே நாளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
நெசவாளர்களுக்குக் கூடுதல் இலவச மின்சாரம் குறித்து பரிசீலனை: அமைச்சர் ஆர்.காந்தி
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
காங்கிரசில் ஊழல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஊழலை நிரூபித்து இது வரை யாரும் தண்டிக்க வில்லை, ஊழளால் மக்கள் பிளவு பட வில்லை ஆனால் இந்த மதவாதிகளால் மக்களிடம் ஓர் அட்சத்தை ஒரு வாக்கி விட்டார்கள். பொய்யை சுமத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை நஞ்சை விதைப்பதே இவர்களின் நோக்கம். மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு வரும் சமூகம் அல்ல.