உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளியான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அஜய் பங்காவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கி தலைவர் பதவிக்கான அமெரிக்க வேட்பாளராக கடந்த மாதம் அறிவித்தார்.
இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அவரது வேட்புமனுவை ஆமோதித்தன.
அமெரிக்காவை தவிர வேறு எந்த நாடும் உலக வங்கி தலைவருக்கான தனது வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (மார்ச் 30) நிறைவடைந்தது. இதனால் இந்திய வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தற்போதைய உலக வங்கி தலைவராக உள்ள டேவிட் மல்பாஸ் பதவி விலகிய பிறகு அஜய் பங்கா பதவியேற்கவுள்ளார். அஜய் பங்கா பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த 5 வருடங்களுக்கு அவர் உலக வங்கி தலைவராக செயல்படவுள்ளார்.
யார் இந்த அஜய் பங்கா?
63 வயதாகும் அஜய் பங்கா இந்தியாவில் பிறந்து பின்னர் அமெரிக்க குடிமகனானவர். இவருடைய முழு பெயர் அஜய்பால் சிங் பங்கா ஆகும்.
புனேவின் காட்கி கண்டோன்மென்ட்டில் பிறந்த அஜய் பங்கா டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள ஐஐடியில் எம்பிஏ படித்தார்.
அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக்கில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். நெஸ்லேவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அஜய் பங்கா அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் நிர்வாகத்துறையில் பணியாற்றினார்.
நெஸ்லே எஸ்ஏவில் பணிபுரிந்த பிறகு, அஜய் பங்கா பெப்சிகோ இன்க் நிறுவனத்தில் சேர்ந்தார்.
1996ம் ஆண்டில், அவர் சிட்டி குழுமத்தில் பணியாற்றத் தொடங்கினார், அங்கே பணியில் சேர்ந்த நான்கு ஆண்டுகளில் சிட்டி ஃபைனான்சியல் மற்றும் அமெரிக்க நுகர்வோர்-சொத்துக்கள் பிரிவின் வணிகத் தலைவராக ஆனார்.
2005ல் சிட்டி வங்கியின் அனைத்து சர்வதேச நுகர்வோர் செயல்பாடுகளுக்குமான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ல் அமெரிக்க குடியுரிமைப் பெற்றார் அஜய் பங்கா.
2008ம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சிட்டி குழுமத்தின் தலைவராக அஜய் பங்கா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் 2009 ல் மாஸ்டர்கார்டு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்றார்.
மஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக 11 ஆண்டுகள் பதவி வகித்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சாதனைகள் செய்ததற்காக அஜய் பங்காவிற்கு 2016 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
மேலும் அஜய் பங்கா, 2012-ல் வெளியுறவுக் கொள்கை சங்கப் பதக்கத்தைப் பெற்றார். 2019-ல் எல்லிஸ் ஐலண்ட் மெடல் ஆஃப் ஹானர் மற்றும் பிசினஸ் கவுன்சில் ஃபார் இன்டர்நேஷனல் அண்டர்ஸ்டாண்டிங்கின் குளோபல் லீடர்ஷிப் விருதையும் பெற்றுள்ளார்.
மோனிஷா
இந்தூர் கிணறு விபத்து: தொடரும் சோகம்!
பத்து தல: ரசிகர்களுக்குப் பத்தல…விமர்சனம்!