அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விரைவில் ஒரு புதிய, பெரிய அறிக்கை வரவிருப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், கடந்த ஜனவரி 24 இல் அதானி குழுமம் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில், “அதானி குழுமம் தனது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான வகையில் வலுவாக காட்டுகிறது. பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் ஈட்டுகிறது. வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது” என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் காரணமாக அதானி குழுமம் கடுமையான சரிவுகளை சந்தித்தது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் கடும் இழப்புகளை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்தடுத்த நாட்களில் அதானியின் பங்குச் சந்தை மதிப்பு சரிய தொடங்கியது. இது அவரது சொத்து மதிப்பையும் பாதித்தது. மேலும் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானி படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இந்திய அரசியலிலும் இன்றுவரை இந்த விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் இந்த விவகாரத்தால் நடக்கவே இல்லை.
இந்நிலையில் விரைவில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட உள்ளதாக ஹிண்டன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய நேரப்படி இன்று (மார்ச் 23) அதிகாலை 1.33 மணிக்கு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கைக்குப் பதிலளித்து 413 பக்கம் அடங்கிய அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டது. அதில், “இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதானி குழுமத்தின் பதில் அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து ஹிண்டன்பர்க் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், “முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் ’தேசியம்’ என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. இந்தியா ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசு நாடாகும்.

ஆனால், அதானி குழுமத்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தது.
அதுமட்டுமின்றி எதிர்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக மத்தியில் ஆளுங்கட்சியான பாஜவிடம் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அதானி கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒருவரது தனிப்பட்ட கடன் விவரங்களை வெளியிடுவதற்கு ஆர்பிஐ சட்டத்தில் இடம் இல்லை” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வில் அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு ஒரு தீர்வு காணப்படாமல் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், “விரைவில் புதிய ரிப்போர்ட்… இன்னொரு மிகப்பெரிய விவகாரம்” என்று குறிப்பு கொடுத்துள்ளது ஹிண்டன்பர்க். உலக அளவில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா