சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஏழு நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று நியூஸ்கிளிக் நிறுவனம், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் டெல்லியில் செயல்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் டெல்லி சிறப்பு படை போலீசார் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். டெல்லி, நொய்டா, காசியாபாத் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது பத்திரிக்கையாளர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்ட பலரை லோதி நகரில் உள்ள சிறப்பு படை தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
நேற்று மாலை நியூஸ் கிளிக் டெல்லி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
விசாரணையின் இறுதியில் உபா சட்டத்தின் கீழ் நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு தலைவர் அமீத் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
501 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் வருவதால் குறையுமா?
32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – அமிதாப் கூட்டணி..!