கேரளாவில் திருமணமான சில நாட்களில் காய்ச்சல் காரணமாக புதுப்பெண் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவியது. இதன் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம், மற்றும் முதுகெலும்பில் தண்டுவடத்தில் இருந்து ஊசி மூலம் திரவம் எடுக்கப்பட்டு, அவற்றை மெடிக்கல் காலேஜ் மைக்ரோ பயாலஜி பிரிவின் வைரஸ் ரிசர்ச் அண்ட் டைக்னோஸ்ட்ரிக் லேபாரட்டரியில் பரிசோதனை நடத்தியபோது, அது வெஸ்ட் நைல் ஃபீவர் என தெரியவந்துள்ளது.
காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மயக்கம், கை, கால்கள் தளர்ந்துபோதல் உள்ளிட்டவை வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கான அறிகுறிகள். மேலும், மூளைக்காய்ச்சல் ஏற்படுவது போன்ற சில அறிகுறிகளும் தென்படும் . இந்த ஆண்டு மட்டும் பல்வேறு காய்ச்சல் காரணமாக 121 பேர் கேரளாவில் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, திடீர் காய்ச்சல் காரணமாக திருமண நாளில் பெண் ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம் அடிக்கோலி பகுதியை சேர்ந்த மம்முட்டி என்பவரின் மகள் ஜூபைரியா என்பவருக்கும் அர்ஷத் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண தினத்தன்று மாலையில் ஜூபைரியாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரால் திருமண விழாவில் பங்கேற்க முடியவில்லை.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து, கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் , காய்ச்சல் குணமடையாத நிலையில் ஜூபைரியா கடந்த சனிக்கிழமை இறந்து போனார். திருமணமான சில நாள்களிலேயே மணமகள் இறந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூபைரியாவுக்கு 21 வயதுதான் ஆகிறது. அவரின், உடலை பார்த்து கணவர் உள்ளிட்ட உறவினர்கள் கதறியது காண்போர் கண்களை கலங்க வைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“முத்தமிழ் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்” : ரவிகுமார் எம்.பி
25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்கிறது!