இலங்கையின் அதிபர் அநுர குமார திஸாநாயக்க அந்நாட்டின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியாவை நியமித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்றைய இரவே தொடங்கிய வாக்கு எண்ணிக்கை அடுத்த நாள் வரை நீடித்தது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அநுர குமார திஸானாயக்க 39.45% வாக்குகள் பெற்று முதலிடமும், சஜித் பிரேமதாச 34.32% வாக்கு சதவீதத்துடன் இரண்டாவது இடமும், ரணில் விக்ரமசிங்கே 17.25% வாக்கு சதவீதத்துடன் மூன்றாவது இடமும் பெற்றனர்.
ஆனால் யாரும் 50% வாக்குகளைத் தாண்டாததால், விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் அநுர குமார திஸாநாயக்க மொத்தமாக 42.31 வாக்குகள் பெற்று இலங்கையின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரியா இலங்கையின் 16வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபர் முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
கல்வி, நீதி, தொழிலாளர்,அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் துறை அமைச்சராகவும் ஹரிணி பதவியேற்றார்.
இதன் மூலம் சிரிமவோ பண்டாரநாயக்கே, சந்திரிகா பண்டாரநாயக்கே ஆகியோரை அடுத்து இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் ஆகியுள்ளார் ஹரிணி அமரசூரியா.
இது மட்டுமல்லாமல் இவர் ஒரு புகழ்பெற்ற கல்வியாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவார்.
புதிய அரசு அமைந்ததையடுத்து பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!
ஆதவ் ஆர்ஜூனாவுக்கு விசிகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு!
மனைவி பட்ட வேதனை… தாங்க முடியாத 90 வயது கணவர் செய்த காரியம்… கண்ணீரில் மூழ்கிய கன்னியாகுமரி