கர்நாடக டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூத் சிபிஐயின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல், பொருளாதார குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் போன்ற உயர்மட்ட வழக்குகளை கையாளும் மத்திய புலனாய்வு அமைப்பாக சிபிஐ உள்ளது. தற்போது இதன் இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்காக உயர்மட்ட குழு மே 13ஆம் தேதி மாலை கூடியது.
பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஆலோசனை செய்தது.
சிபிஐ அமைப்பின் விவகாரங்களை நிர்வகிப்பதிலும் அதன் சுதந்திரத்தை உறுதி செய்வதிலும் சிபிஐ இயக்குநர் முக்கியப் பங்காற்றுவதால் யாரை அடுத்த இயக்குநராக போடலாம் என்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய இயக்குநர் தேர்வு பட்டியலில் பிரவீன் சூத் (1986-பேட்ச் கர்நாடகா கேடர்), தினகர் குப்தா (1987-பேட்ச் பஞ்சாப் கேடர்) மற்றும் சுஷிர் சக்சேனா (1987-பேட்ச் மத்தியப் பிரதேசம் கேடர்) ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் இயக்குநர் தேர்வு பட்டியலை தயாரிப்பதில் குளறுபடிகள் இருந்ததாகவும், புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், பெண் அதிகாரிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், அதிகாரிகளின் அனுபவம் மற்றும் பணிமூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யலாம் என்று தலைமை நீதிபதி பரிந்துரைத்திருக்கிறார்.
இந்தசூழலில் கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் சிபிஐயின் புதிய இயக்குநராக இன்று (மே 14) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பிரவீன் சூத்?
ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் சூத், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றார்.
1986ஆம் ஆண்டு பிரவீன் சூத் காவல்துறை பணியில் சேர்ந்தார். 1989 இல் மைசூரில் உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பெல்லாரி, ராய்ச்சூர் பகுதியிலும் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், பெங்களூரு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் நியூயார்க்கில் உள்ள சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் மேக்ஸ்வெல் ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸ் ஆகியவற்றில் பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மை படிப்பை படித்தார்.
2004 முதல் 2007 வரை மைசூர் நகர காவல் ஆணையராகவும் பணியாற்றினார். தனது பதவி காலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நெட்வொர்க்கிலும் பணியாற்றியிருக்கிறார்.
2011 வரை பெங்களூரு போக்குவரத்து காவல்துறையில் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றினார்.
பிரவீன் சூத் 1996 இல் சிறந்த சேவைக்கான முதலமைச்சரின் தங்கப் பதக்கத்தையும், 2002இல் சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கத்தையும், 2011இல் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
2013-14ல், பிரவீன் சூத் கர்நாடக மாநில போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். மாநில உள்துறை முதன்மை செயலாளராகவும், கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் ஏடிஜிபியாகவும், காவல்துறை நிர்வாக ஏடிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் டிஜிபியாக உள்ள இவரது பணிகாலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரவீன் சூத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தற்போது முதல்வர் ரேசில் இருக்கும் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
பிரவீன் சூத் ஒரு பயனற்றவர் என்று கூறியிருந்த டி.கே.சிவக்குமார், “மூன்று ஆண்டுகளாக பதவியில் உள்ள பிரவீன் சூத் காங்கிரஸ் மீது மட்டுமே வழக்கு போட்டுள்ளார். காங்கிரஸ் மீது மட்டும் 25 வழக்குகளை போட்டுள்ள அவர், பாஜக மீது ஒரு வழக்குக்கூட பதிந்ததில்லை. எங்கள் அரசு வந்தால் நிச்சயம் பிரவீன் சூத் மீது கைது நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருந்தார்.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையவிருக்கும் நிலையில், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் ஆன்லைனில் சிக்கிய அமைச்சர்கள்!
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” : ஆளுநர் உருக்கம்!