இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் பெயரை மாற்றியமைக்கும் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 11) மக்களவையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அதன்படி, இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சியங்கள் சட்டம் என்று மாறுகின்றது.
மேலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவில், குற்றவியல் சட்டங்களில் புதிய விதிகள் மற்றும் தண்டனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும்.
இது இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தார்மீக உரிமை பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் இல்லை. வரலாறு எங்கும் தமிழகமும் திமுகவும் இத்தகைய அடக்குமுறை மேலோட்டங்களுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, இந்தித் திணிப்புப் புயலை நாம் இதற்கு முன்பு எதிர்கொண்டோம், மீண்டும் அதைச் செய்வோம், தளராத உறுதியுடன்.
இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
மாணவனைத் தாக்கிய மாணவர்கள்: மாரி செல்வராஜ், மோகன்ஜி கண்டனம்!
கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!