இஸ்ரேல் லெபனான் மக்களுடன் போர் புரியவில்லை. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மட்டுமே தங்களின் டார்கெட் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 குழந்தைகள் 58 பெண்கள் உள்பட 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சமீப காலத்தில் இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலும் ஹிஸ்புல்லா இயக்கமும் போர் புரிவதை கை விடுவதே அமைதிக்கு வித்திடும் என பல நாட்டு தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், இஸ்ரேலும் ஹிஸ்புல்லா இயக்கமும் ஆயுதத்தை கீழே போடும் நிலையில் இல்லை.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்து விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “எங்கள் நகரம், எங்கள் மக்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை ஏவுகிறது. இஸ்ரேல் மக்களை காத்துக் கொள்ளவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
நீண்ட காலமாக லெபனான் மக்களை மனித கேடயமாக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்துகின்றனர். லெபனான் மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்காக லெபனான் மக்களே உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள்.
அவர்களுக்கு உதவியாகவும் இருக்காதீர்கள். நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான். பாதுகாப்பான இடத்தில் இருங்கள் . எங்களது தாக்குதல் முடிவடைந்ததும் நீங்கள் வீடு திரும்பி பாதுகாப்பாக வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக லெபனானில் பேஜர் வெடித்தும், வாக்கி டாக்கிகள் வெடித்தும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்