அண்டை நாடான நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 4) நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 69 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள ருகும் மாவட்டத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதேபோல ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதுவரை 100-க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிற்கின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
காயமடைந்த மக்களை மருத்துவமனையில் சேர்ப்பது, வீடு இழந்து தவிப்பவர்களை முகாம்களில் தங்க வைப்பது உள்ளிட்ட பணிகளை கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு பணி அதிகாரிகள் செய்து வருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
முதலில் 5.6 ரிக்டர் என்றளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 6.4 ரிக்டர் ஆக உயர்ந்தது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து இருக்கிறது.
நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் என்ன நடந்தது என்பதை மக்கள் உணரும் முன்பே ஏராளமானோர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி, பீகார் மாநிலங்கள் வரை உணரப்பட்டதாக மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர்,
”நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். இந்த நேரத்தில் நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கிறது.
அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்!