பாஸ்கர் செல்வராஜ்
ஜிடிபி வளர்ச்சி: ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்கள் அதற்கு முந்தைய ஆண்டைவிட எவ்வளவு மதிப்புள்ள சரக்கை சந்தைக்கு (சொந்த தேவைக்கு அல்ல) உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதைச் சொல்வது ஜிடிபி வளர்ச்சி.
கொரோனாவால் உற்பத்தி முடங்கி 6.6 விழுக்காடு சுருங்கிய 2020-21 ஆண்டைவிட இந்த ஆண்டு 8.7 விழுக்காடு இந்திய பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாகவும் குறைவாகவும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியல் மேலே உள்ளது.
அடுத்த ஆண்டு 6.9 விழுக்காடும் அதற்கு அடுத்த ஆண்டு 6 விழுக்காடும் வளரும் என்கிறார்கள். நாட்டில் உற்பத்தி பெருகி, பொருளாதாரம் வளர்ந்து எல்லோருக்கும் அது நன்மை பயக்குமானால் மகிழ்ச்சிதான். பெரும்பாலோர் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பது நாம் அறிந்தது.
அப்படி என்றால் யார்தான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்?

நிறுவனங்களின் லாப வளர்ச்சி: இந்த காலாண்டில் நிறுவனங்களின் லாபம் குறுகியிருப்பதாக ‘மின்ட்’ பத்திரிகை தலைப்பிட்டிருக்கிறது. படத்தைப் பார்த்ததும் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இதன்படி பொருளாதார வளர்ச்சியால் பொருட்களை நுகர்ந்த மக்களும் சரி உற்பத்தி செய்து விற்ற நிறுவனங்களும் சரி… மகிழ்ச்சி அடையவில்லை என்றாகிறது.
உண்மையாகவா என்ற கேள்வியுடன் சற்று உற்றுப்பார்த்தால் இந்தக் கணக்கீட்டில் இருக்கும் சூட்சுமம் புரியும். மேலேயுள்ள புள்ளிவிவரப்படம் நிறுவனங்களின் பொருள் விற்பனை கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது எவ்வளவு வளர்ச்சி கண்டிருக்கிறது; அந்தப் பொருள் விற்பனை வளர்ச்சியின் மூலம் நிறுவனங்கள் எவ்வளவு லாபமீட்டியுள்ளன என்பதைக் காட்டுகிறது.
இதன்படி 2022-23 இரண்டாவது காலாண்டின்(Q2) லாபம் 2021-22 இரண்டாவது காலாண்டின்(Q2) லாபத்தைவிட -25.3 விழுக்காடு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது ஒப்பீட்டு மதிப்பு; இதனை நிறுவனங்கள் பொருளை விற்று நஷ்டமடைந்திருப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது.
சரி… ஏன் இவ்வளவு லாபம் வீழ்ச்சியடைந்திருக்கிறது? இது ஒப்பீட்டு மதிப்பு என்பதால் இந்தக் கேள்விக்கான விடையை 2021-22(Q2) மற்றும் 2022-23(Q2) மதிப்புகளை சற்று நெருங்கிப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
2021-22(Q2), 2022-23(Q2) ஆகிய இரண்டு காலாண்டின் பொருள் விற்பனை வளர்ச்சி முறையே 27.1%, 28.8%. கிட்டத்தட்ட ஒரே அளவு பொருள் விற்பனை வளர்ச்சி. ஆனால், 2021-22(Q2) மற்றும் 2022-23(Q2)வின் நிகர லாப வளர்ச்சி வேறாக (53.8%, -25.3%) இருக்கிறது. ஒரே அளவு பொருள் விற்பனை வளர்ச்சி. ஆனால், லாபம் மட்டும் வேறு. எப்படி? ஏன்?

விலை குறியீட்டு எண்: பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும் விலை குறியீட்டு எண் புள்ளிவிவரப்படம் மேலே உள்ளது. 2021-22(Q2) ஜூலை-செப்டம்பர் மற்றும் 2022-23(Q2) காலாண்டு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது (இந்திய நிதியாண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மார்ச்சில் முடியும்). 2021-22(Q2)வில் சேவைகளுக்கான விலை குறியீட்டு எண் ஐம்பதொன்றுக்கும் குறைவாக இருந்தது 2022-23(Q2)வில் ஐம்பத்து மூன்றுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
இதன்படி பார்த்தால் முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கிறது. அப்படி என்றால் நிறுவனங்களின் லாபம் இந்த காலாண்டில்தான் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் முந்தைய காலாண்டு லாபம் மிகையானதாகவும் இந்த ஆண்டு மிகக் குறைவாகவும் இருக்கிறது. ஏன்?
இந்த விலை குறியீட்டு எண் வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் சந்தையில் விற்கும் விலைகளைக் குறிப்பது. பொதுவாக இவர்கள் பொருள் விற்பனையாகும் அளவைப் பொறுத்து வரப்போகும் மாதங்களுக்கான பொருட்களை முன்பே வாங்கி இருப்பில் (Inventory) வைத்திருப்பார்கள். இவர்களுக்குப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் விலையைக் கூட்டும்போது அது இவர்களை அடைந்து சந்தையில் பொருட்கள் விலை உயர்வு காண காலம் எடுக்கும்.
ஆனால் விலையைக்கூட்டி விற்பனை செய்தவுடன் நிறுவனங்கள் கணக்குப் புத்தகத்தில் ஏற்றிவிடும். ஆதலால் நிறுவனங்களின் லாபம் உடனடியாக கூடுகிறது. விலைகளோ ஒரு காலாண்டு தள்ளி வாடிக்கையாளர்களால் உணரப்படுகிறது என்பதாக நாம் ஊகிக்கலாம். இந்த ஊகம் உண்மையா என எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?

ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி: மாதாமாதம் ஒன்றியத்துக்கு ஜிஎஸ்டி வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் புள்ளிவிவரப்படம் மேலே உள்ளது. இந்த வரி அந்தந்த மாதம் எவ்வளவு பொருட்கள் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறும்.
உதாரணமாக 100 ரூபாய் விலையில் 100 பொருட்கள் விற்பனையானால், விற்பனை மதிப்பான 10,000 ரூபாயில் 18 விழுக்காடு ஒன்றியம் வரியாக விதிக்குமானால் 1,800 ரூபாய் ஒன்றியத்துக்கு வருமானம் வரும். அதே அளவு பொருளை 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 2,700 ரூபாயாக ஒன்றியத்தின் வருமானம் கூடும்.
2021-22(Q2) மாதங்களில் வரி வருவாய் (படத்தில் கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது) சற்று உயர்ந்திருக்கிறது. அதற்கு அடுத்த மாதங்களிலும் சீரான அளவு கூடியிருக்கிறது. ஆனால், அதற்கு அடுத்த 2021-22(Q3), 2021-22(Q4) காலாண்டுகளில் பொருள் விற்பனை வளர்ச்சி (28.4%, 24%) பெரிதாகக் கூடாமல் குறையவும் செய்திருக்கிறது.
ஆனால் ஒன்றிய வரி வருவாய் குறையாமல் கூடியிருக்கிறது. அதாவது குறைவான பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்திருக்கிறார்கள்.
2022-23(Q1) காலாண்டில் பொருள் விற்பனை மிகப்பெரும் அளவில் (43.9%) வளர்ந்திருக்கிறது. பொருள் விற்பனை அளவும் கூடி அந்த பொருட்களின் விலையும் கூடியதால் இந்த காலாண்டில் ஒன்றியத்தின் ஜிஎஸ்டி வருவாய் வரலாறு காணாத வகையில் 1.5 ட்ரில்லியனுக்கும் மேலாகக் கூடியிருக்கிறது.
ஆனால் நிறுவனங்களின் லாபம் 18.1 விழுக்காடுதான் வளர்ந்திருக்கிறது. காரணம்?
நாளை தொடரும்
கட்டுரையாளர் குறிப்பு

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
சேலம் இரும்பாலை பிரச்சினை: 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன 10,000 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு!