பாஸ்கர் செல்வராஜ்
நேற்றைய தொடர்ச்சி….
குறையும் வேலைவாய்ப்பு:
முறையான வேலைவாய்ப்பையும் பசையான வருமானத்தையும் தரும் துறைகளில் எல்லாம் அடுத்த ஆண்டு எவ்வளவு நபரை வேலைக்கு எடுக்கலாம் என்ற கணிப்பு மேலே உள்ளது. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் வேலைக்கு ஆள் எடுப்பது பெருமளவு குறையும் என்கிறார்கள்.
ஏற்கனவே 15 வயதுக்கு மேற்பட்டோர் உற்பத்தியில் பங்கெடுக்கும் விகிதம் (Labor Force Participation Rate LFPR) 39.6 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. அதாவது 1000 பேரில் 396 பேர்தான் வேலை செய்கிறார்கள் அல்லது தேடுகிறார்கள். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள்.
நாடு நாலுகால் பாய்ச்சலில் வளர்வதாக கூறுபவர்கள் அதற்கு ஆதாரமாகச் சொல்வது தனிநபர் வருமான உயர்வு. நாட்டின் மொத்த வருமானத்தை அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கக் கிடைக்கும் தனிநபர் வருமானம் (Per capita) இப்போது 1,961.4 டாலர்கள்.
சீனாவில் கிட்டத்தட்ட இதே அளவு தனிநபர் வருமானம் இருந்தபோது அங்கே LFPR 77%. அதாவது 1000 பேரில் 770பேர் வேலை செய்திருக்கிறார்கள் அல்லது தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதன்படி அங்கே
1. வேலைவாய்ப்பு அந்த அளவு பெருகி இருந்திருக்கிறது.
2. அந்நாட்டின் தனிநபர் வருமானம் அத்தனை பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் வேலையில் பங்களிப்பவர்கள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் இந்த வருமானம் வேலையில் இருக்கும் ஒரு சிலருக்கே செல்கிறது; பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. (இட ஒதுக்கீட்டை ஏன் ஒழித்துக்கட்ட துடிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை இங்கே கண்டுகொள்ளலாம்) சரி! நிறுவனங்கள் கடன் வாங்குவது அதிகரித்திருக்கிறதே அதனாலாவது வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
குறையும் நிறுவனங்களின் எண்ணிக்கை; இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரும் அளவில் வேலைவாய்ப்பை நல்குபவை சிறு, குறு நிறுவனங்கள். அவற்றின் அளவு குறைந்துகொண்டே வருவதைத்தான் மேலேயுள்ள படம் சொல்கிறது.
ஒன்றியம் அறிவித்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமாவது (PLI) வேலைவாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட முதலீட்டின் அளவு 2,71,498 கோடிகள். ஆனால் வந்ததோ 40,992. இந்த முதலீடுகளின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 59,01,632. ஆனால், உருவானதோ 1,97,910.
2018-19இல் 42.5 விழுக்காடாக இருந்த விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21இல் 46.5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. தொழில்மயமாகும் நாடுகளில் எல்லாம் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் நிலையில் இந்தியாவிலோ இது அதிகரிக்கிறது. அதாவது உற்பத்தி இயந்திரமயமாகிறது.
தொழிலாளர்கள் விவசாய தொழிலுக்கு திரும்புகிறார்கள். நாம் தொழில்மயமாதலுக்கு நேரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சரி… நிறுவனங்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால் வேறு எந்த நிறுவனங்கள்தான் வங்கிகளில் கடன் வாங்குகின்றன? ஏற்கனவே வாங்கியவர்கள்தான்.
வாங்கி… உற்பத்தியை இயந்திரமயமாக்குவார்கள். இதன்மூலம் தொழிலாளர்களை வெளியேற்றி உற்பத்தி செலவை மலிவாக்கி லாப வரம்பைக் குறையாமல் காப்பார்கள்.
இப்படி நிறுவனங்கள் ஒரு வரம்பை மீறி கொள்ளை லாபமீட்டுவதால் நாட்டில் ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. ஆதலால் விலைவாசி உயர்வுக்கு ஒரு வரம்பை ஏற்படுத்தலாமா என்று கேட்டால் அது இடதுசாரி சர்வாதிகாரம்; விலையைச் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும் என்பார்கள்.
அது போட்டி உள்ள சூழலில்தான் சாத்தியம்; இந்த ஏகபோகம் நிலவும் காலத்தில் விலைகளைக் கட்டுப்படுத்த வேலைவாய்ப்பைப் பெருக்க சில தொழில்களில் அரசு முதலிடலாம்; நியாயவிலைக் கடைகளை நடத்துவதைப்போல சில பொருட்களைச் சந்தைப்படுத்தி சமூகத்தின் சமனை பேணலாமே என்று கேட்டால்…. ஐய்யோ அப்படியான அரசு நிறுவனங்கள் எல்லாமே பாருங்கள் ஊழலும், செயலூக்கமும் அற்ற தொழிலாளர்களால் நிரம்பி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன; இவை எல்லாம்தான் நாட்டின் பொருளாதாரம் வளர தடையாக இருக்கிறது; இவற்றை எல்லாம் தனியார்மயம் ஆக்கிவிட வேண்டும் என்பார்கள்.
நமக்கு இதில் ஏற்பில்லை என்றாலும் ஒன்றியம் அதை ஆமோதித்து அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்தத் துறைகளிலும் இவர்கள் நுழைந்து உற்பத்தி பெருகி நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் “இதேபோல” வளரும். வேலைவாய்ப்பு அருகி தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் போதிய உணவும் ஊட்டச்சத்துமின்றி இப்போது போலவே வாடும்.
நிறைவடைந்தது
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.