பாஸ்கர் செல்வராஜ்
நேற்றைய தொடர்ச்சி….
மூன்று பெருநிறுவனங்களிடம் செறிவடைந்த சந்தை:
இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஆரம்பித்த 2011-12 முதல் 2018-19க்குள் மூன்று பெருநிறுவனங்கள் முக்கிய பொருட்களின் சந்தையை எத்தனை விழுக்காடு கைப்பற்றி இருக்கின்றன; அதன்பிறகு மொத்த பொருள் உற்பத்தி மற்றும் மொத்த பொருள் விற்பனை விலையேற்றம் அதனால் சந்தையில் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்ட விலைவாசி உயர்வைக் கூறும் படம் மேலே உள்ளது.
உற்பத்தி, கிடங்குகள், சந்தைப்படுத்துதல் என அனைத்தும் மூவரிடம் பெருமளவு குவிந்திருக்கும் நிலையில் சந்தையில் பெருமளவு போட்டி இருக்கப் போவதில்லை. இவர்கள் சொல்வதுதான் விலை. நாம் விலை அதிகமாக இருக்கிறதே என்று வேறு நபரிடம் சென்று வாங்க இடமும் இல்லை.
பொருட்கள் விற்பனையாகும் இடம், காலம், வாங்கும் நபர்களின் தன்மை என அனைத்து தரவுகளும் இவர்களிடம் குவிந்திருப்பதால் துல்லியமாகக் கணித்து அதற்கு ஏற்ப பொருட்களின் விலைகளை வைத்து விளம்பரப்படுத்தி விற்று பெருலாபம் ஈட்டி விடுகிறார்கள்.
சரி… இப்படி விலைவாசி கூடிக்கொண்டே சென்றால் வாங்கும் நம்மிடம் பணம் இருக்குமா? அதிக விலையில் விற்கும் பொருட்களை தொடர்ந்து வாங்க நமது வருமானம் உயர்கிறதா?
வருமான வீழ்ச்சி: ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சராசரி விலையேற்றம் மற்றும் அந்த ஆண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வைக் காட்டும் படம் மேலே உள்ளது. 2020-21ஆம் ஆண்டைத் தவிர மற்ற இரு ஆண்டுகளுக்கும் விலைவாசி உயர்வைவிட கூலி குறைவாகவே உயர்ந்திருக்கிறது.
படத்தைப் பார்த்து 2020-21 விலைவாசியைவிட கூலி அதிகமாகக் கூடியிருக்கிறது எனக் கருதுவோமானால் மீண்டும் இங்கே நாம் தவறிழைக்கிறோம். 2019-20ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-21இல் இவ்வளவு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அதேசமயம் 2019-20ஆம் ஆண்டு விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது கூலி குறைவாகவே அதிகரித்திருக்கிறது.
உதாரணமாக 93 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் கிலோ 31 ரூபாய் வீதம் விற்ற அரிசியை முன்பு மூன்று கிலோ வாங்க முடியும். இப்போது அரிசி கிலோ கிலோ 40 ரூபாயாக விலை உயர்ந்து கூலி 100 ரூபாயாக உயர்ந்துவிட்டதாகக் கொள்வோம். இப்போது இந்த கூலியைக் கொண்டு அவர் இரண்டரை கிலோ அரிசிதான் வாங்க முடியும்.
அடுத்த ஆண்டு அரிசியின் விலை கிலோ 47 ரூபாயாக உயர்ந்து அவரின் கூலியும் 106 ரூபாயாக அதிகரிக்கிறது எனக் கொண்டால் இப்போது அவர் இரண்டே கால் கிலோ அரசிதான் வாங்க முடியும்.
கூலி கூடியதைப் போன்று தெரிந்தாலும் நிகரமாக அவரின் கூலி இங்கே தொடர்ந்து குறைகிறது. அதற்கு அடுத்த ஆண்டு விலைவாசிக்கேற்ப கூலி உயரவில்லை என்றால் அவர் வாங்கும் அரிசியின் அளவு இரண்டு கிலோவாக குறைந்துவிடும்.
இது எல்லாம் அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான். நான் அதிகம் சம்பாதித்து வங்கி சேமிப்பை வைத்து உண்பவன். எனக்கு எந்த கவலையும் இல்லை என்று நினைப்பீர்களேயானால் நீங்கள் ஒன்றியத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அவர்கள் அசமத்துவ சனாதனத்தைப் பின்பற்றினாலும் இந்த விஷயத்தில் எல்லா இந்துக்களையும் சமமாக பாவிக்கும் சமதர்மவாதிகள்.
வங்கிகள் கொடுக்கும் வட்டிக்குறைவு; வங்கிகள் சேமிப்பாளர்களுக்குக் கொடுக்கும் வட்டிக்கும் அது கடனாகக் கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு எவ்வளவு என்பதை மேலே உள்ள படம் காட்டுகிறது.
உதாரணத்துக்கு 100 ரூபாய் சேமிப்புக்கு மூன்று ரூபாய் வட்டியுடன் 103 ரூபாய் சேமிப்பாளருக்கு வங்கி கொடுக்கிறது என்றால் 100 ரூபாய் கடனாகக் கொடுத்து அது 106 ரூபாயாக வசூலிக்கிறது.
இதன்மூலம் நிகரமாக மூன்று ரூபாய் லாபம் பார்க்கிறது. இதனால் எனக்கென்ன பிரச்சினை? எனக்குதான் மூன்று ரூபாய் அதிகம் கிடைக்கிறதே என்று நாம் நினைப்போமானால் மீண்டும் இங்கே நாம் தவறிழைக்கிறோம்.
மேலே கூலியின் இடத்தில் சேமிப்பை பதிலீடு செய்து மீண்டும் படித்தால் நிகரமாக நம்முடைய சேமிப்பின் மதிப்பு எப்படிக் குறைகிறது என்பது புரியவரும். வங்கி நம்முடைய சேமிப்புக்கு கூடுதலாகப் பணம் கொடுக்கவில்லை. நமது பணம் இழக்கும் மதிப்பை ஈடுசெய்ய கூடுதலாகப் பணம் கொடுக்கிறது.
இந்த இழப்பை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? விலைவாசி உயர்வு (Inflation) மூலம்தான். அந்த வருடம் விலைவாசி உயர்வைக் கண்காணிக்கும் இந்திய மத்திய வங்கி ஆர்பிஐ அதற்கு ஏற்ப வட்டிவிகிதத்தைக் கூட்டியோ, குறைத்தோ அறிவிக்கும். அதற்கு ஏற்ப வங்கிகள் நம்முடைய சேமிப்புக்கான வட்டியைக் கொடுக்கும்.
உலக வங்கிகள் எல்லாம் இரண்டு விழுக்காடு விலைவாசி உயர்வு என்பதை இலக்காகக் கொண்டு தனது பணக்கொள்கையைத் தீட்டி செயல்படும்போது இந்தியாவின் ஆர்பிஐ நான்கு விழுக்காட்டை இலக்காகக் கொண்டிருக்கிறது. அதிலும் குறைந்தபட்சம் இரண்டு விழுக்காடு அதிகபட்சம் ஆறு விழுக்காடு என வரம்பை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுகிறது.
அதாவது 100 ரூபாய் கூலியோ, சேமிப்போ 6 ரூபாய் மதிப்பை இழந்து 94 ரூபாயாகக் குறைந்தாலும் அந்த இழப்பை நம்மை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. இந்த அநியாய வரம்பான 6 விழுக்காட்டையும் கடந்து விலைவாசி உயர்வு சென்ற நிலையிலும் ஆர்பிஐ எதுவும் செய்யாமல் வாளாவிருந்தது.
சமீபத்தில் வங்கிகள் முதலாளிகளுக்குக் கொடுத்த பத்து லட்சம் கோடிகளை வாராக்கடனாக காந்தி கணக்கில் எழுதியதாக செய்திகளில் பார்த்திருப்போம். அப்படியும் வங்கிகள் லாபகரமாகச் செயல்படுவதாக செய்தி வந்தது. பணத்தை இழந்தும் வங்கிகள் லாபகரமாகச் செயல்படும் ரகசியம் இதுதான்.
இந்தக் கண்கட்டி விளையாட்டில் நம்முடைய பணம் இவ்வளவு மதிப்பை இழந்திருக்கிறது. வங்கிகள் நமது பணத்தை வைத்திருக்க நாம் அவர்களுக்குக் கட்டணமாகப் பணம் கொடுத்திருக்கிறோம். அந்தப் பணத்தை கடனாக வாங்க வங்கிகள் அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறது. அந்தப் பணத்தில் அவர்கள் உருவாக்கிய பொருளை அதிக விலையில் வாங்கி அவர்களுக்கு நமது பணத்தை உழைப்பை லாபமாகக் கொடுத்திருக்கிறோம்.
நம்முடைய பணத்தை தொழிற்சாலையில் மூலதனப் பொருட்களாக மாற்றிய அவர்கள் அந்தச் சொத்தின் ஒரு பகுதியை பங்குகளாக சுழற்சியில் விட்டார்கள். அந்த சொத்து பெரும் லாபம் கொழிக்கும் என்பதால் பலரும் அதனை வாங்கினார்கள். அது அந்தச் சொத்தின் மதிப்பை பல மடங்காகக் கூட்டி இருக்கிறது.
இந்தச் சுழற்சியில் நம்முடைய சேமிப்பும் கூலியும் குறைந்து அது அவர்களிடம் போய் குவிந்துவிட்டது. அப்படிக் குறையும் சேமிப்பை ஊக்குவிக்க ஆர்பிஐ கவர்னர் வங்கிகளைக் கூப்பிட்டு பேசுகிறார். இங்கே இருந்தால்தானே சேமிக்க… பணத்தைப் பறிகொடுத்த நாம் இப்போது பொருட்களை வாங்க என்ன செய்வோம்? கடன் வாங்குவோம்.
உயரும் நம்முடைய கடன்; ஒவ்வொரு வருடமும் வங்கிகள் கொடுக்கும் கடன் எத்தனை விழுக்காடு மாறியிருக்கிறது என்பதை காட்டும் புள்ளிவிவரப்படம் மேலே உள்ளது.
இதில் மக்கள் வாங்கும் கடன் 20 விழுக்காடும் நிறுவனங்கள் வாங்கும் கடன் 13.6 விழுக்காடும் கூடியிருக்கிறது என செய்திகள் சொல்கின்றன. கூலியையும் சேமிப்பையும் இழந்த மக்கள் கடன் வாங்குவது அதிகரித்திருக்கிறது எனக்கொண்டால் இந்தக் கடனை மக்கள் எப்படித் திரும்பக் கட்டுவார்கள்? வேலைசெய்து சம்பாதித்துதான். அப்படி சம்பாதிக்க வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
நாளை தொடரும்
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.