பாஸ்கர் செல்வராஜ்
நேற்றைய தொடர்ச்சி….
1. இது முந்தைய ஆண்டு காலாண்டுடன் ஒப்பிடும்போது எட்டிய வளர்ச்சி. (கடந்த காலாண்டைவிட எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதல்ல)
2. இதன்படி இதற்கு முந்தைய காலாண்டின் லாபம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதனால் ஒப்பீட்டளவில் லாபம் குறைவாக காண்பிக்கப்படுகிறது.
3. ஆனால் ஒன்றிய வரி வருவாய் அந்தந்த மாதம் விற்பனையான பொருட்களின் அளவு மட்டும் விலையின் திரட்சி; ஒப்பீட்டு மதிப்பல்ல.
சரி… பொருட்களின் விலைகளை நிறுவனங்கள் மிக அதிக அளவில் கூட்டி விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள்;
அரசும் வரலாறு காணாத வருவாய் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது எனக் கொள்வோமானால் இந்தியாவின் விலைவாசி குறியீட்டு எண் மிக அதிக அளவில் கூடியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டின் விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (Inflation) குறைவு என அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கிறதே!
விலைவாசி உயர்வு: பொருட்களின் விலைகள் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதையே கணக்கிடுகிறார்கள். அதைக் காட்டும் புள்ளிவிவரப்படம் மேலே உள்ளது.
2020ஆம் ஆண்டின் விலைவாசி குறியீட்டு எண் 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. ஆதலால் 2021ஆம் ஆண்டிலும் விலைவாசி உயர்ந்தாலும் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவு என அரசு கூறியிருக்கிறது.
அவ்வளவே! இதற்கு அடுத்த ஆண்டான 2022-லும் விலைவாசி தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது. அது ஒப்பீட்டளவில் 2021ஐ விட அதிகமாக இருக்கிறது. சுருங்கக் கூறினால்…
1. விலைவாசி தொடர்ந்து கூடுகிறது; அதில் எந்த மாற்றமும் இல்லை. விலைவாசி உயரும் அளவு மட்டும் மாறுபடுகிறது.
2. அதற்கு ஏற்ப நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதிலும் மாற்றமில்லை. ஆனால், அந்த லாபத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது.
3. இதற்கு ஏற்ப பொருள் விற்பனை அதிகரித்தாலும் அல்லது அவற்றின் விலைகள் அதிகரித்தாலும் அல்லது இரண்டும் அதிகரித்தாலும் ஒன்றியத்தின் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே செல்கிறது அல்லது குறையாமல் இருக்கிறது.
இந்த விலைவாசி உயர்வால் நிறுவனங்களுக்கும் வரி அளவிடும் அரசுகளுக்கும் மட்டுமல்ல… இந்த நிறுவனங்களில் முதலிட்ட முதலீட்டாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.
வருவாயீட்டல் விகித உயர்வு: நிறுவனங்கள் ஈட்டும் ஒரு ரூபாய்க்கு முதலீட்டாளர்கள் எவ்வளவு ரூபாயை விலையாகக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் பங்குகளின் விலைக்கும் அந்த பங்குகள் ஈட்டும் வருவாய்க்குமான விலை வருவாயீட்டல் விகிதம் (P/E ratio) 2012-22 காலத்தில் மாதாமாதம் எவ்வளவு மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் படம் மேலே உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்து அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டை தாராளமாக அனுமதிக்க தொடங்கி, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, மின்னணு பொருளாதார முறையை ஊக்குவித்தது முதல் இந்த வருவாயீட்டல் விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
விலைவாசி உயர்ந்த 2020 முதல் இது உச்சத்தை நோக்கி சென்றிருக்கிறது. 2015-16இல் அதிகபட்சமாக 29094ஐ தொட்ட சென்செக்ஸ் குறியீட்டு எண் இப்போது 63583ஐ தொட்டிருக்கிறது. நிறுவனங்களின் லாபம் பெருக பெருக இந்த பங்குச்சந்தை உயர்ந்து நிறுவனங்களின் மதிப்பு கூடிக்கொண்டே சென்றிருக்கிறது.
அதில் முதலிட்டவர்களின் முதலின் மதிப்பும் கூடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்தச் சொத்து மதிப்பு உயர்வுக்கு ஏற்ப நிறுவனங்களின் அதிபர்கள் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து வருகிறார்கள்.
இந்த விலைவாசி உயர்வு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், அரசு என எல்லோருக்கும் கொண்டாட்டமாக இருந்தாலும் மக்களான நமக்கு இதனால் என்ன திண்டாட்டம் என்று பார்ப்பதற்கு முன்பாக எப்படி நிறுவனங்களால் தொடர்ந்து பொருட்களின் விலையைக் கூட்ட முடிகிறது என்ற கேள்விக்கு விடை காண முற்படுவோம்.
ஏனெனில் நமது ஊர் சந்தையில் கத்திரிக்காய் விற்கும் வியாபாரிகள்கூட ஒரே விலை வைத்து விற்பதில்லை. ஒருவர் 10 ரூபாய் சொன்னால் மற்றவர் 9 ரூபாய் சொல்லி தனது காய்கறி விற்பனையைக் கூட்ட முற்படுவார்.
மற்றவர் வேறுவழியின்றி இதே விலைக்கு அல்லது வாங்கிய விலையைவிட ஓரிரு ரூபாய் அதிகம் வைத்து விற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார். இந்தப் போட்டி சந்தையில் கத்திரிக்காயின் விலையை மிக அதிகமாகக் கூட்டி வியாபாரிகள் கொள்ளை லாபம் அடைவதைத் தடுத்து நிறுத்தி வாடிக்கையாளர்களான நமது பையை காலியாக்காமல் காக்கும்.
புயல், மழைக்காலங்களில் காய்கறி வரத்து குறையும்போது விலைகள் கூடினாலும் பின்பு வேகமாக அது குறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஆனால், இந்த நிறுவனங்கள் மட்டும் ஒவ்வோர் ஆண்டும், ஆண்டு முழுவதும் விலையை கூட்டிக்கொண்டே இருக்கிறார்களே… எப்படி?
நாளை தொடரும்
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.