நீட் வினாத்தாள் கசிவு … என்.டி.ஏ-வை கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம் : சிபிஐக்கு உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒப்புக்கொண்ட நிலையில் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்தன.

24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

4 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகளுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அந்த வகையில் பார்த்தால் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளிக்கும் பட்சத்தில் 179 கேள்விகளுக்கு 716 மதிப்பெண்களுடன், அந்த கேள்விக்கு ஒரு மைனஸ் மதிப்பெண் என 715 மதிப்பெண் தான் வரும்.

ஆனால் மாணவர்கள் 719, 718 என மதிப்பெண்கள் வாங்கியது முறைகேடுக்கான சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கில் முதலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தேசிய தேர்வு முகமை மறுத்தது. பின்னர் ஒருசில இடத்தில் மட்டும் முறைகேடு நடந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.

இதையடுத்து கருணை மதிப்பெண்ணை ரத்து செய்துவிட்டு, 1500க்கும் அதிகமான மாணவர்களுக்கு மறுதேர்வை நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் மறுதேர்வு நடத்தப்பட்டன.

நீட் யுஜி மருத்துவ கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுக்கடுக்கான கேள்விகள்…

இந்நிலையில் இன்று (ஜூலை 8) நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குஜராத்தைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி, நாங்கள் அனைத்து வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்க முடியாது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே கேட்க முடியும் என்று தெரிவித்தார்.

மதிய உணவு இடைவெளிக்கு பிறகு, முதலில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்த மாணவர்களின் வாதத்தையும் அதன் பிறகு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு தரப்பு வாதத்தையும் கேட்கிறோம் என்றார் தலைமை நீதிபதி.

அப்போது மேகாலயா மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்கள் மாணவர்களுக்கு 40 நிமிடங்கள் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. 1563 மாணவர்களின் பட்டியலில் நாங்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து மதிய உணவு இடைவெளிக்கு பிறகு விசாரணை ஆரம்பித்தது.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹூடா, “நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோருகிறோம். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னால், அதாவது மே 4ஆம் தேதி டெலிகிராம் சேனலில் இதுதான் நீட் தேர்வு வினாத்தாள், இதுதான் அதற்கான விடை என தகவல் பரவியது.

மே 5ஆம் தேதி தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு தயாரிக்கப்பட்டிருந்த வினாத்தாள் எஸ்.பி.ஐ வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. மாற்றுத் திட்டமாக தயாரிக்கப்பட்டிருந்த வினாத்தாள் கனரா வங்கியில் வைக்கப்பட்டிருந்தது என்று தேசிய தேர்வு முகமை கூறுகிறது. 4ஆம் தேதி வினாத்தாள் வெளியானதை அடுத்து கனரா வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வினாத்தாள் பயன்படுத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டு 720/720 மதிப்பெண்கள் மூன்று மாணவர்கள் மட்டுமே எடுத்திருந்தனர். 2020ல் ஒரே மாணவர்தான் எடுத்திருந்தார். ஆனால் 2024 தேர்வில் 67 மாணவர்கள் எடுத்துள்ளனர்” என்று ஒரு டைம்டேபிளை சமர்ப்பித்தார் வழக்கறிஞர் ஹூடா.

அப்போது தலைமை நீதிபதி, 67 பேரில் எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இந்த 67 பேரில் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று பதிலளித்தார் வழக்கறிஞர் ஹீடா.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ எந்த வங்கியில் இருந்த வினாத்தாள் வழங்கப்பட்டது என்பது தேர்வர்களுக்கு தெரியாது. முதலில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. பின்னர் சரியான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து மாணவர்கள் தரப்பு வழக்கறிஞார் ஹூடா, “தேசிய தேர்வு முகமை முறையான விதிமுறைகளை பின்பற்றவில்லை. முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதாக என்.டி.ஏ கூறுகிறது. டெல்லி, பாட்னா, ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி, அப்படியானால் வினாத்தாள் கசிவு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைதான் என்று கூறினார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல், ஒரே ஒரு இடத்தில், பாட்னாவில் மட்டும்… குற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூற,  ‘இது முழு தேர்வையும் பாதிக்கிறது’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். டெலிகிராம் சேனலில் வினாத்தாள் பரவியதை காட்ட சொல்லியும் கேட்டார் தலைமை நீதிபதி.

அப்போது வழக்கறிஞர் ஹூடா, என்னிடம் காட்டப்பட்ட ஒரு வீடியோ உள்ளது. டெலிகிராம் சேனலில் பரவிய அந்த வீடியோவில் உண்மையான தேர்வுடன் பொருந்திய கேள்வி பதில்கள் இடம்பெற்றுள்ளன” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையிடம் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வங்கிகளில் வினாத்தாள் எப்போது வைக்கப்பட்டது? என்று கேட்க,  ‘தேர்வு நடைபெறுவதற்கு 5-6 நாட்களுக்கு முன்னதாக வைக்கப்பட்டது’ என்று தேசிய தேர்வு முகமை பதிலளித்தது.

இதற்கு தலைமை நீதிபதி சரியான தேதியை சொல்லுங்கள்… எப்போது வினாத்தாள் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

என்.டி.ஏ சார்பில், மே 5ஆம் தேதி 11 மணியளவில் என்று பதிலளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி, எங்கெல்லாம், எத்தனை மையங்களில் தேர்வு நடந்தது? என கேள்வி எழுப்ப, “இந்தியாவில் 4,750 மையங்கள், வெளிநாட்டில் 15 மையங்களில் தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 23,33,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். 72,000 பேர் தேர்வெழுதவில்லை” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி, வெளிநாட்டு தேர்வு மையங்களுக்கு எப்படி வினாத்தாள் அனுப்பப்பட்டன. கொரியர் மூலம் அனுப்பப்பட்டதா? தூதரங்கள் வாயிலாக அனுப்பப்பட்டதா? 571 நகரங்களில் 4,750 மையங்களில் தேர்வு நடைபெற்றது என்கிறீர்கள். இந்த மையங்களுக்கு எப்படி அனுப்பப்பட்டது. துல்லியமான தேதியை சொல்லுங்கள்…

வினாத்தாள் தயாரிப்பது எப்படி?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு தேசிய தேர்வு முகமை, என்.டி.ஏ தலைமையகத்தில், நிபுணர்கள் குழுவால் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது என்று பதிலளித்தது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி, “நிபுணர்கள் குழு எப்போது வினாத்தாளை தயாரித்து கொடுத்தது. அது எப்படி பாதுகாக்கப்பட்டது. என்.டி.ஏ அவற்றை வெவ்வேறு நகரங்களில் உள்ள எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகளுக்கு எப்போது அனுப்பியது?

அச்சு இயந்திரம் எங்குள்ளது? எப்போது அச்சடிக்க அனுப்பப்பட்டது? அச்சகத்துக்கு கேள்விகள் எப்படி அனுப்பப்பட்டன? 50 லட்சம் கேள்வித் தாள்கள் என்று சொல்லப்படுகிறது. அச்சடிக்கப்பட்ட பிறகு அவை எங்கு அனுப்பப்பட்டது. நேரடியாக என்.டி.ஏ அலவலகத்துக்கு வந்ததா?” என கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு என்.டி.ஏ வழக்கறிஞர், ஆமாம் என்று சொல்ல…. “எங்கு அச்சடிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டாம். இல்லை என்றால் அடுத்த ஆண்டு மீண்டும் வினாத்தாள் கசிவுக்கு வழிவகுக்கும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

“வினாத்தாள் அச்சடிக்கப்பட்டதற்கும் 4,751 மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதற்கும் இடையில் எத்தனை நாட்கள் இருந்தன?

டெலிகிராம், வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ வினாத்தாள் கசியும் போது, அது காட்டுத்தீயாக பரவும்.

1563 மாணவர்கள் கருணை மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். இதில் எத்தனை பேர் நூறுசதவீதம் மதிப்பெண்களைப் பெற்றனர்.

இதில் வினாத்தாள் கசிந்த தேர்வு மையங்களில் இருந்து யாராவது முழுமதிப்பெண் பெற்றுள்ளார்களா?

720 இல் 720 மதிப்பெண் பெற்ற அனைவரும் மோசடி செய்பவர்களாக இருக்க முடியாது. ஆனால் முந்தைய காலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் முழுமதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இரண்டாவதாக, ஒரு மாணவர் லக்னோவில் தேர்வு மையத்தை தேர்வு செய்துள்ளார். பின்னர் அவர் உத்தரப் பிரதேசத்தில் தொலை தூரத்தில் உள்ள மையத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னொன்று, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பார்த்தால் அது நன்றாக இல்லை. நீட் தேர்வுக்கு படித்தது போல் 12ம் வகுப்புத் தேர்வுக்கு மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பதில்லை என்பது மற்றொரு பிரச்சினையாகும்” என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

மறுத்தேர்வு…

இந்த முறைகேடு விவகாரத்தில் எத்தனை எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது? என்று அவர் கேள்வி எழுப்ப, வினாத்தாள் கசிவுக்காக பாட்னாவில் மட்டும் ஒரே ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற முறைகேடுகளுக்காக வெவ்வேறு பகுதிகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்.

இதையடுத்து வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்தது இது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடக்கும் நேரம் ஒத்துப்போகிறது என்றால் அது தீவிரமாக விசாரிக்கப்படும். நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டால் மறுத்தேர்வு அவசியமில்லை… தவறு செய்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் நிச்சயம் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து.

வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ, என்.டி.ஏ, ஜூலை 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஒழுங்கு நடைமுறை குழுக்களை மத்திய அரசு அமைக்கலாம்” என்று உத்தவிட்டார் தலைமை நீதிபதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

கிராபெனின்-என்னும் நானோ மெட்டீரியல்

காளிதாஸ் 2… படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts